Saturday, 12 March 2016

கொடுப்பினை என்கிற விதி என்றால் என்ன? (AAF001)

         ஒரு குழந்தை தன் தாயின் கருவறையிலிருந்து வெளியேறி, இப்பிரபஞ்சத்தில் உள்ள காற்றை சுவாசிக்கும் வினாடியே அந்த குழந்தையின் பிறந்த நேரமாகக் கணக்கிடப்படுகிறது.

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நவக்கிரகங்களின் வாயிலாக தான் இறைவன் நாம் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துகின்றார் என்பது எனது தாழ்வான கருத்தாகும். எல்லாம் வல்ல அந்த இறைசக்தியை நாம் உணர முடியாவிட்டாலும் நவகிரகங்களின் நிலைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது தான் ஜோதிடத்தில் மறைந்திருக்கின்ற மிகப் பெரிய சூட்சமம்.

ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதிய விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு கிரகமும் தன்னுள் வைத்துள்ள தாதுப் பொருட்கள் மற்றும் அதனின் நிறம், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு  பூமியில் செலுத்தும் கதிர்வீச்சுகளின் மூலம் மனிதர்களை பல மாற்றுதல்களுக்கு உட்படுத்துகின்றன. நம் முன்னோர்கள் ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் எவ்வாறு மனித உயிர்களில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்பதை உணர்ந்து ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சில காரகங்களை தொகுத்து வழங்கினார்கள்.

அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் நிற்காமல் பன்னிரெண்டு பாவங்கள் உள்ளடங்கிய ராசி மண்டலத்தை சுற்றி வருகின்றன. மேலும் ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சின் தன்மை மற்றும் அளவு என்பது அதன் இருப்பிடத்தை (பாவத்தை) பொருத்து வேறுபடுகிறது என்பதை உணர்ந்து பன்னிரெண்டு பாவங்களுக்குள்ளும் ஒன்பது கிரகங்களின் காரகங்களை தொகுத்துள்ளார்கள்.

காரகம் என்பதை ஆங்கிலத்தில் சிக்னிவிகேட்டர்(significator) என்று கூறுவார்கள். அதாவது ஒன்றனை பற்றி குறிப்பிடுவது ஆகும்(signifies something). பொதுவாக ஜோதிடத்தில் காரகம் என்பது ஒரு கிரகமோ/பாவமோ ஒரு விஷயத்தினை பற்றி குறிப்பிடுவது ஆகும்.(A planet/bhava that signifies something).

உதாரணத்திற்கு..
கல்விக்கு புதன் கிரக காரகமாகும்; பாவ காரகத்தில் நான்காம் பாவம் அடிப்படை கல்வியையும், ஒன்பதாம் பாவம் உயர்நிலைக் கல்வியையும் குறிப்பிடுகின்றது. ஆக ஒருவரின் கல்வியைப் பற்றி தெரிந்து கொள்ள புதன் கிரகத்தையும், நான்காம் பாவத்தையும் (அடிப்படை கல்வி), ஒன்பதாம் பாவத்தையும் (உயர்நிலைக் கல்வி) ஆய்வு செய்ய வேண்டும்.

மேற்கண்ட இரண்டும் (கிரக காரகம், பாவ காரகம்) தான் ஒருவரின் விதியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றாலும் மேலும் சில காரணிகள் உள்ளன.

அதாவது நல்ல பலன்களோ, தீய பலன்களோ அதை அனுபவிப்பது லக்னம் என்ற ஜாதகர் தானே. மேலும் எந்த ஒரு காரகத்தையும் (விஷயத்தையும்) அனுபவிக்கும் ஆற்றல் இருந்தாலும் அதில் லக்னம் என்ற ஜாதகருக்கு சிறிதளதாவது முயற்சியும், ஈடுபாடும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஜாதகர் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியும். ஆக ஒருவரின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் லக்ன பாவத்திற்கும் சிறிதளவு பங்கு இருக்கின்றது.

கடைசியாக ஒருவரின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் ஒன்பதாம் பாவத்திற்கும் சிறிதளவு பங்கு உண்டு. ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் தெய்வத்தை குறிக்கின்ற பாவமாகும். ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் வலுவாக இருந்தால் அவருக்கு தெய்வ அனுக்கிரகம் உள்ளது என அர்த்தம்.

ஒரு ஜாதகரின் விதியை பாவ காரகம் 40 சதவிகிதமும், கிரக காரகம் 40 சதவிகிதமும், லக்ன பாவம் 15 சதவிகிதமும், ஒன்பதாம் பாவம் 5 சதவிகிதமும் நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு ஆண் ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கான விதியை நிர்ணயிப்பது 40% ஏழாம் பாவமும், 40% சுக்கிரனும், 15% லக்ன பாவமும், 5% ஒன்பதாம் பாவமும் ஆகும்.


ஒருவர் ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலம் அவரின் தோற்றம், குணம், ஆரோக்கியம், அந்தஸ்து, தனநிலை, சொத்து, திருமண வாழ்க்கை, உத்தியோகம், தொழில், நண்பர்கள் மற்றும் அவர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவாரா!! கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பாரா அப்படியெனில் எதன் ரீதியில் அனுபவிப்பார் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு சிலர்..... சரி ஒருவர் பிறக்கின்ற நேரத்தை பொருத்து தான் அவரது விதி அமைகிறது எனில் ஒரு நல்ல நேரத்தை குறித்து கொண்டு சிசேரியன் முறையில் குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வர முடியுமே என நினைக்கிறார்கள். ஜோதிடம் கற்ற ஆரம்ப காலத்தில் எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் எழுந்தது தான்.. 


ஆனால் அனுபவத்தில் இது பற்றி நான் தெரிந்து கொண்டதை இப்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது சிசேரியன் முறை என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மற்ற அறுவை சிகிச்சை முறைகளை காட்டிலும் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். மேலும் இது பற்றி அறிந்து கொள்ள மருத்துவ துறையில் உள்ள எனது நண்பரின் ஆலோசனையும்; கூகுளில் அலசியபோது கிடைத்த தகவல்களும் பெரிதும் உதவின. 

ஒரு சிசேரியன் முறையை வெற்றிகரமாக முடிக்க குறைந்தது 2 நிமிடமும் அதிகபட்சம் 45 நிமிடங்களும் ஆகும். இந்த 2 நிமிட அனுகுமுறையை கூட மருத்துவர்கள் அவரச காலத்திற்கு(in an emergency case) மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உயர் கணித சார ஜோதிடப்படி ஒவ்வொரு 30 வினாடிக்கும் விதி கொடுப்பினை மாறிக் கொண்டே இருக்கும். இப்படியிருக்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் இந்த இயற்கைக்கு மாறான சிசேரியன் முறையை கையாள்வது சற்றும் இயலாத காரியம் அல்லது மிக மிக கடினமான காரியம் என்றே நான் கூறுவேன்.

ஒருவரின் விதி என்கிற கொடுப்பினை என்பது அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவ அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது. இதை நான் அனுபவ பூர்வமாக உணராவிட்டாலும் இது பற்றி நம் முன்னோர்கள் எழுதிய நூல்களை படித்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். ஒருவரை பார்த்து ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தேதியில் உனக்கு என்ன நடந்தது என்று கேட்டால் அவர் பதிலளிக்க சற்று யோசிக்கும் பொழுது போன ஜென்மத்தில் நடந்தது மட்டும் எப்படி நம்மை போன்ற மனிதர்களுக்கு ஞாபகம் இருக்கும். 

ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல பிரம்மனுக்கு தெரிந்த ரகசியம். ஆக ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவத்தை மையமாக வைத்து நவகிரகங்களின் உதவியோடு நம்மை போன்ற மனிதர்களின் விதியை நிர்ணயிப்பது எல்லாம் வல்ல பிரம்மன் எனக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்..

No comments:

Post a Comment