Saturday, 12 March 2016

திருமண பொருத்தத்தில் நட்சத்திர பொருத்தம் தேவை தானா..!! (AAB003)

இன்று பெரும்பாலான மக்கள் ஜோதிடர்களை அனுகுவது திருமண பொருத்தம் மற்றும் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக தான்..!

காரணம், பொதுவாக பெற்றோர்கள் தன் மகளுக்கோ அல்லது மகனுக்கோ முன் பின் தெரியாத ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கும் பொழுது ஜோதிட ரீதியாக அவர்கள் இருவரும் எந்த வித குறையும் இல்லாமல் மன ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே..

ஒருவரது வாழ்வில் பெரும்பகுதியாக அமைவது இந்த திருமண வாழ்க்கை தான். ஏன் சிலரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாகவும் அமைகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே தங்களது தாய் தந்தையினருடன் வாழ்கிறார்கள். திருமணமான பிறகு தன் கணவரையும் அவரது குடும்பத்தினரையும் சார்ந்து தான் வாழ்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தினத்தன்று வான்மண்டலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கின்றதோ அது தான் அன்றைய தினத்தின் நட்சத்திரம் ஆகும். சந்திரனுக்கு ஒரு நட்சத்திரத்தினை கடக்க தோராயமாக 24 மணி நேரம் (ஒரு நாள்) ஆகும். ஒருவரின் ஜனன காலத்தின் போது (பிறந்த நேரத்தின் போது) சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்று கொண்டிருந்ததோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரமாக அழைக்கப்படுகிறது. 

ஆக ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் என்பது முழுக்க முழுக்க சந்திரனை மையமாக கொண்டதாகும். ஜோதிடத்தில் சந்திரன் முக்கியமாக மனதிற்கும், மனதில் எழும் எண்ணங்களுக்கும் காரகம் வகிப்பவர். எனினும் அந்த எண்ணங்களை செயல்களாக மாற்றவதற்கு மற்ற எட்டு கிரகங்களின் பங்கு அவசியமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றைய சூழலில் திருமண பொருத்தத்தின் போது இந்த ஜென்ம நட்சத்திரம் என்பது விஸ்வரூபம் எடுக்கின்றன. ஆம் இன்று ஒரு சில ஜோதிடர்கள் வெறும் நட்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பச்சைக்கொடி காட்டி விடுகிறார்கள். சரி, அந்த நட்சத்திர பொருத்ததையாவது சரியாக பார்க்கிறார்களா என்றால்.. இல்லை.. அதிலும் ஏகப்பட்ட குழறுபடி! ஒரு சில நட்சத்திரங்களுக்கு பழமொழி என்ற பெயரில் போலி விதிகளை உட்புகுத்தி இந்த திருமண பொருத்தத்தையே நாசம் செய்து ஜோதிடம் பொய்த்து போவதற்கு வழி வகுக்கிறார்கள்.

உதாரணத்திற்கு
பூராடம் போற இடம் போராடும்..
பூராடம் கலுத்தில் நூலாடாது..

என்று சில புலமை வாய்ந்த அரைகுறை ஜோதிடர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அளந்து விடுகிறார்கள்.
மேற்கூறிய பழமொழிகள் ஒரு பெண் பூராடம் நட்சத்திரத்தில் பிறப்பது மோசமான அமைப்பு என்பதனை சுட்டிக் காட்டுகிறது. 

அதாவது முதல் பழமொழி..
பூராடம் நட்சத்திரத்தில் பிறக்கின்ற பெண் திருமணமாகி போகிற புகுந்த வீட்டில் (கணவர் குடும்பத்தில்) போராடுவார்/வாக்குவாதம் செய்வார் எனக் கூறுகிறது.

இரண்டாவது பழமொழி
பூராடம் நட்சத்திரத்தில் பிறக்கின்ற பெண்ணிற்கு திருமணமானாலும் நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ முடியாது, அதாவது சீக்கிரம் விதவையாகிவிடுவார் என்பதாகும்.

நான் சமீபத்தில் கூகுளில் அலசிய போது நம் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 74927 குழந்தைகள் பிறப்பதாகவும்; அதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4495 குழந்தைகள் பிறக்கிறதாகவும் கூறப்பட்டிருந்தன. அவற்றில் சராசரியாக 2180 ஆண் குழந்தைகளும் 2315 பெண் குழந்தைகளும் பிறக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பார்க்கையில் பூராடம் நட்சத்திரத்தன்று பிறக்கும் 2315 பெண் குழந்தைகளுக்கும் இது போன்ற மாங்கல்ய தோஷம் அல்லது போராடும் குணம் இருக்குமா என்று கேட்டால் நான் இல்லை என்று தான் கூறுவேன்.

உயர்கணித சார ஜோதிட முறைப்படி நுட்பமாக ஆராய்ந்தால் ஒவ்வொரு 30 வினாடிக்கும் விதி கொடுப்பினை மாறிக் கொண்டே இருக்கும். அப்படி இருக்கையில் எப்படி ஒரு தினத்தில் பிறந்த இந்த 2315 குழந்தைகளுக்கும் விதி ஒரே மாதிரியாக அமையும்.. ஒரு சில ஜோதிடர்கள், இது போன்ற போலி விதிகளை பழமொழிகளாக கூறி, அந்த தோஷம் இந்த தோஷம் என்றெல்லாம் சொல்லி; பரிகாரம் செய்தால் தான் சரியாகும் என சில அப்பாவி மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள்.

ஜோதிடத்தில் ஜென்ம நட்சத்திரத்தின் பங்கு தான் என்ன?

ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் மையமாக கொண்ட இந்த ஜென்ம நட்சத்திரத்தின் பங்கு ஒரு பகுதியிலும் ஒரு பகுதி தான் என்று நான் கூறுவேன். காரணம் ஜோதிடத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு காரகம் வகிக்கின்றன. கிரகங்களிலேயே வேகமாக சுற்றும் கிரகம் சந்திரன் ஆகும். அதனால் தான் ஒருவர் பிறக்கின்ற பொழுது மற்ற கிரகங்கள் சஞ்சரிக்கும் நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக எடுத்துக்கொள்கிறோம்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் அதிபதி யாரோ அவருடைய தசை தான் ஆரம்ப தசையாக வரும். நம் இந்திய ஜோதிடத்தில் உள்ள மகத்தான சிறப்பு என்னவெனில்; சந்திரனை அடிப்படையாகக் கொண்டு தசா புத்திகளை நிர்ணயித்து அந்தந்த காலத்திற்கேற்றார் போல் பலனுரைப்பதே ஆகும். சந்திரனை மையமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஜென்ம நட்சத்திரம் என்பது தசாபுத்திகளை நிர்ணயிக்க தான் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதே எனது தாழ்வான கருத்தாகும்.

இப்படிப்பட்ட சந்திரனை மட்டும் மையமாக கொண்டு ஒருவரின் திருமண வாழ்க்கையையே தீர்மானிப்பது சரியா? இது எந்த விதத்தில் நியாயம்??

அப்படியென்றால் ஜோதிடத்தில் திருமண பாவமான ஏழாம் பாவம் எதற்கு? லக்ன பாவம் எதற்கு? எல்லாவற்றிர்க்கும் மேல் களத்திரகாரனான அதாவது திருமண வாழ்க்கைக்கு உரிய கிரகமான சுக்கிரன் (ஆணிற்கு) செவ்வாய் (பெண்ணிற்கு) எதற்காக..?? கதாநாயகர்களே இவர்கள் தானே.....!!

சரி.. ஒரு வேளை அதிர்ஷ்டவசமாக இந்த ஏழாம் பாவம், லக்ன பாவம், களத்திர காரகன் திருமணத்திற்கு உண்டான நல்ல நிலையில் இருந்து விட்டால் பரவாயில்லை; மாறாக பாதகமாக இருந்துவிட்டால் என்னதான் இந்த நட்சத்திர பொருத்தம் படி 9 பொருத்தங்கள் இருந்து திருமணம் செய்து வைத்தாலும் திருமண வாழ்க்கை மோசமானதாக அமையும். ஏன் விவாகரத்து வரை கூட சென்று விடும். மேற்கண்ட ஏழாம் பாவம், லக்ன பாவம், சுக்கிரன், செவ்வாய் போன்ற காரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சந்திரனை மட்டும் மையமாக கொண்ட நட்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்ப்பது சரியல்ல..

மேலும் திருமண பொருத்தத்திற்கு நட்சத்திரம் மட்டும் தான் தேவை என்றால் பிறந்த தினத்தன்று காலண்டரில் போடப்பட்டிருக்கும் நட்சத்திரத்தை குறித்து வைத்து கொள்ளலாமே! எதற்காக ஒரு ஜோதிடரை அனுகி ஜாதகம் கணிதம் செய்ய வேண்டும்..?? பிறகு ஜோதிடம் தான் எதற்கு..??

சரி வெறும் இந்த நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்ப்பது இது போன்ற அரைகுறை ஜோதிடர்கள் உடன் நின்று விட்டால் பரவாயில்லை. இன்று ஒரு சில மக்கள் இதை பார்த்து கொண்டு தங்களது ஸ்மார்ட் போன்களில் உள்ள ஆண்டிராய்டு அப்ளிகேஷன்கள் மற்றும் வெளியில் விற்கப்படும் சில புத்தகங்களில் உள்ள நட்சத்திர பொருத்த விதிகளை கொண்டு தாங்களே பொருத்தம் பார்த்து முடிவெடுக்கின்றனர்.

இங்கே நான் நட்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை ஒரு பகுதியாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். நட்சத்திரம் என்பது சந்திரனை மட்டும் மையப்படுத்தி கணக்கிடப்படுவது என்பதனை திரும்பவும் வாசகர்களாகிய உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். ஏன் சில நட்சத்திர பொருத்தங்கள் சாதமாக இல்லாவிட்டாலும் கூட களத்திர காரகன் சுக்கிரன்/செவ்வாய், ஏழாம் பாவம் மற்றும் லக்ன பாவம் திருமணத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் திருமணம் செய்யலாம். 

சரி இது போகட்டும்.. மற்றொரு புறம்……

"கொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்"
(ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது),

மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது,

கேட்டை நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது..

என்ற கருத்து நிலவி வருகிறது.
இப்படியே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒதுக்கி வந்தால் ஒரு கட்டத்தில் 27 நட்சத்திரங்களையும் ஒரு குறிப்பிட்ட உறவினருக்கு ஆகாது என வெறுத்து ஒதுக்க வேண்டியது தான். பின்பு ஒருவருக்கும் திருமணம் ஆகாது.

நம் முன்னோர்கள் எந்த ஒரு நட்சத்திரத்தையும் உயர்வாகவோ தாழ்வாகவோ தரம் பிரித்து சொன்னதில்லை. வான்மண்டலத்தில் அனைத்து நட்சத்திரங்களும் 13 பாகைகள் 20 கலைகள் (4 பாதங்கள்) கொண்டது என்பதே இதற்கு சாட்சி.

எவர் ஒருவர் வாழ்க்கையையும் தான் பிறந்த நட்சத்திரம் தீர்மானிக்காது. ஒருவரின் வாழ்க்கை முறையை தீர்மானிப்பதில் அவருடைய லக்ன பாவமே பிரதானமானது. ஒரு பெண்ணின் நட்சத்திரம் அவருடைய வாழ்க்கையையே தீர்மானிக்காத போது எப்படி அவரின் மாமனாரையோ, மாமியாரையோ, மூத்த மைத்துனரையோ பாதிக்கும். உண்மையில் ஒருவரது வாழ்க்கை முறை  அவரது சுய ஜாதகத்தை பொருத்தே அமையும். எந்த ஒரு நட்சத்திரத்து பெண்ணும் தனக்கு மருமகளாக வருவதால் அவரின் வாழ்க்கை பாதிக்காது. என்றோ! யாருக்கோ! ஒருவருக்கு நடந்ததை மனதில் கொண்டு அதை அப்படியே பழமொழிகளாக கூறி வருகிறார்கள். இந்த பழமொழிகளை பின்பற்றி வரும் சில அரைகுறை ஜோதிடர்களின் வாயிலாக இன்று சாதாரண மக்களும் இதை பெரிது படுத்துகின்றனர். இன்றைய சூழ்நிலையில்..

ஒரு பெற்றோர் திருமண வயதை நெருங்கிய தன் மகனுக்கு வரன் பார்க்கின்ற வேளையில் நட்சத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவர் தன் மகனுக்கு அவரின் நண்பர்கள் மூலமாகவோ, உறவினர்கள் மூலமாகவோ அல்லது சில திருமண தகவல் மையங்கள் வாயிலாகவோ வரனை தேர்ந்தெடுக்கும் பொழுது இது போன்ற நட்சத்திரங்களின்  (பூராடம், ஆயில்யம், மூலம், கேட்டை) பெயரை கேட்டாலே

இல்லை.. இல்லை.. சரி வராது!!
இந்த நட்சத்திரமா..!!!! வேண்டாம் பா! என்று தடாலடியாக கூறிவிடுகிறார்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வது??

இதனால் எத்தனை பெண்களுடைய திருமணம் தாமதப்படுகிறது. ஏன் ஒரு சில பெண்களுக்கு திருமணமே ஆகாமல் இருக்கிறது. உண்மையில் இது போன்ற நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் ஜாதகங்களை நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு சிலர் நல்ல குணங்களுடனும், திறமைசாலிகளாகவும் திருமண வாழ்க்கைக்கு சாதகமான அம்சங்களையும் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக.. ஒருவரின் திருமண வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவரது ஜாதகத்தில் உள்ள ஏழாம் பாவம் மற்றும் களத்திர காரகன் (ஆண்-சுக்கிரன் பெண்-செவ்வாய்) ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதனை கூறி திருமண பொருத்தத்தின் போது ஜென்ம நட்சத்திரத்தை காட்டிலும் இவ்விரண்டிற்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். 

கோச்சாரம் என்றால் என்ன? (AAF003)

கோச்சாரம் = கோள் + சாரம்.
கோள் என்பது கிரகம்; சாரம் என்பது வடமொழி சொல், அதற்கு தமிழில் நகர்தல் என்பது பொருள்.

நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி நகர்வதைப் போல இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஓரிடத்திலேயே இருக்காமல் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சூரியனை மையமாக வைத்து ஒரு நீள்வட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அதை முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் 27 நட்சத்திரக் கூட்டங்களாக பிரித்து அது ஒவ்வொன்றிர்க்கும் ஒரு பெயரை வைத்து பின் 27 நட்சத்திரங்களாக தொகுத்துள்ளார்கள்.

இந்த நீள்வட்ட வடிவமான பாதை என்பதே ராசி மண்டலமாக அழைக்கப்படுகிறது. ஒரு ராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரிகளை) கொண்டது. இந்த ராசி மண்டலத்தை 12 பாவங்களாக பிரித்து அது ஒவ்வொன்றிர்க்கும் ஒரு பெயரை வைத்தனர். ஒரு ராசி என்பது 30 பாகைகளை (டிகிரிகளை) கொண்டது. 30 பாகைகளை (டிகரிகளை) கொண்ட ஒரு ராசிக்கட்டம் 2 ¹/⁴ நட்சத்திரங்களை அதாவது [ {2*4} + 1 ] = 9 நட்சத்திர பாதங்களை கொண்டது ஆகும். ஒரு நட்சத்திரம் என்பது நான்கு பாகங்களை கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ராசி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் மேல் ஒவ்வொரு கிரகமும் வலம் வருகின்றன. ஆனால் ஒவ்வொரு கிரகமும், தான் சுற்றும் வேகத்தில் மாறுபடுகின்றன.

கிரகங்களிலேயே சந்திரன் தான் வேகமாக சுற்றும் கிரகம் ஆகும். சந்திரன் ஒரு ராசியை கடக்க சுமார் 2 ¹/⁴ நாட்கள் ஆகும். மேலும் ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 24 மணி நேரம் (ஒரு நாள்) ஆகும். சந்திரன் வான்மண்டலத்தில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றதோ அது தான் அன்றைய தின நட்சத்திரம் ஆகும். சந்திரன் ராசி மண்டலத்தை முழுவதுமாக கடக்க சுமார் 27 நாட்கள் ஆகும்.

புதன், சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்களுக்கு ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு மாதமும்; ராசி மண்டலத்தை முழுவதுமாக சுற்ற சுமார் ஒரு வருடமும் ஆகும். செவ்வாய் ஒரு ராசியை கடக்க சுமார் ஒன்றரை மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.

மேலும், ஒரு ராசியை கடக்க,

குரு ஒரு வருடமும், ராகு கேதுக்கள் ஒன்றரை வருடங்களும், சனி இரண்டரை வருடங்களும் எடுத்துக்கொள்கின்றன. இதை தான் நாம் குரு பெயர்ச்சி, ராகு கேதுப் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அழைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை பற்றி தெரிவிப்பது தான் கோச்சாரம் ஆகும். அதாவது வான்மண்டலத்தில் அப்பொழுதுள்ள கிரக நிலைகளைப் பற்றி தெரிவிப்பது கோச்சாரம் என்று அழைக்கப்படுகிறது..

ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் விதி அமைகிறது. ஒவ்வொருவரது ஜாதகத்திலும் இந்த விதிப்படி ஒரு சில கிரகங்கள் பாதகமாகவும் (வலுவிழந்து) மற்ற கிரகங்கள் சாதகமாகவும் அந்த ஜாதகருக்கு அமையும். அதாவது ஒருவர் பிறந்த நேரப்படி பாதகமான நிலையில் உள்ள கிரகங்கள் தீமையான பலன்களையும்; சாதகமான/நல்ல நிலையில் உள்ள மற்ற கிரகங்கள் நன்மையான பலன்களையும் அந்த ஜாதகருக்கு செய்யும்.

ஒருவரின் சுயஜாதகப்படி நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் கோச்சாரத்தில் தீமை பயக்கக்கூடிய கிரகங்களின் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் இந்த நன்மை செய்யக்கூடிய கிரகங்களுக்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் சிறிது தடை ஏற்படும். மேலும் இந்த விதி அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தாது.

வேகமாக சுற்றும் (நகரும்) கிரகங்களான சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கோச்சாரத்தில் எப்படி இருந்தாலும் (எந்த ஒரு  கிரகத்தின் நட்சத்திரத்தில் இருந்தாலும்) அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் பாதிப்பினை உண்டாக்காது. இது போன்ற கிரகங்களுக்கு வகுக்கப்பட்ட காரகங்களின் பலன்களை காண ஒருவரின் விதியை மட்டும் ஆய்வு செய்தால் போதும்; கோச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.

அதேசமயம் மெதுவாக சுற்றும் (நகரும்) கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி ஆகியோர்கள் கோச்சாரத்தில் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் நட்சத்திரத்தில் செல்லும் பொழுது அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் சிறிதளவு தடையினை ஏற்படுத்தும். வாசகர்கள் நன்றாக கவனிக்கவும்; இந்த கோச்சாரத்தால் ஏற்படும் தடை என்பது சிறிதளவாக தான் இருக்குமே தவிர பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது எனக் கூறி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

தசாபுத்தி என்றால் என்ன? (AAF002)

        ஜோதிடத்தில் விதி என்கிற கொடுப்பினை என்பது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய யோக, அவயோகங்களைப் பற்றி, அதாவது தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றி தெரிவிப்பது ஆகும். ஆனால், அவற்றை காலம் நிர்ணயம் செய்ய தசை முக்கிய பங்கு வகிக்கின்றது. 

சரி தசை என்றால் என்ன??

தசை என்பது நவக்கிரகங்களும் ஒரு ஜாதகரை இயக்கும் காலம் என்று கூறலாம். அதாவது ஒவ்வொரு கிரகமும் தன் பங்கிற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு ஜாதகரின் மேல்  தன் ஆதிக்கத்தினை செலுத்தும். 

உதாரணத்திற்கு ஒரு கிரகம் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தால் அந்த கிரகத்தின் தசையோ புத்தியோ தன் வாழ்நாளில் நடைபெறும் பொழுது தான் அந்த கிரகத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியும்.

ஜோதிடப்படி ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 120 வருடங்கள் ஆகும். ஆனால் இப்பொழுது உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் உள்ள சில பக்க விளைவுகள் காரணமாக இன்றைய சமூகத்தினர் யாரும் அவ்வளவு காலம் வாழ்வதில்லை. அப்படி வாழ்ந்தால் அது கின்னஸ் சாதனையே!

எனினும் அந்த காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் இந்த 120 வருடங்களை மனிதனின் சராசரி ஆயட்காலமாக வகுத்து ஒன்பது கிரகங்களுக்கும் அதனின் தன்மை மற்றும் காரகத்துவத்தை மையமாக கொண்டு அதற்கென சில தசா வருடங்களை பிரித்து வைத்தனர். அதன்படி 

சூரிய தசை       -------   6 வருடங்கள்
சந்திர தசை      -------   10 வருடங்கள்
செவ்வாய் தசை   -------   7 வருடங்கள்
ராகு தசை        -------  18 வருடங்கள்
குரு தசை        -------  16 வருடங்கள்
சனி தசை        -------  19 வருடங்கள்
புதன் தசை       -------  17 வருடங்கள்
கேது தசை       -------   7 வருடங்கள்
சுக்கிர தசை      -------  20 வருடங்கள்

என மனிதனின் ஆயட்காலத்தை தொகுத்து வைத்துள்ளார்கள்.

மேற்கண்ட வரிசையில் தான் ஒவ்வொரு கிரகமும் தன் தசையை நடத்தும். எனினும்  உலகில் உள்ள அனைவருக்கும் சூரிய தசையே ஆரம்ப தசையாக வராது. ஒரு ஜாதகரின் ஆரம்ப தசையை தீர்மானிப்பது சந்திரன் ஒருவரே. எப்படியென்று நிச்சயமாக விளக்குகிறேன். அதற்கு முன் ஒரு அடிப்படை விஷயத்தை நான் இங்கே முன் வைக்கின்றேன்.

வான்மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த 27 நட்சத்திரங்களையும் ஒவ்வொரு கிரகத்திற்கும் தலா மூன்று நட்சத்திரங்கள் என ஒன்பது கிரகங்களுக்கும் சமப் பங்காக பிரித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக வருவார்கள்.

அஸ்வினி, மகம், மூலம் ---------------------------- கேது
பரணி, பூரம், பூராடம் ----------------------------------- சுக்கிரன்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ------------- சூரியன்
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் -------- சந்திரன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ----------- செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதயம் --------------------- ராகு
புணர்பூசம், விசாகம், பூரட்டாதி ----------------- குரு
பூசம், அனுசம், உத்திரட்டாதி -------------------- சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி -------------------- புதன்


வான்மண்டத்தில் நவக்கிரகங்களும் 27 நட்சத்திரங்களின் மேல் வலம் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அன்றைய தின நட்சத்திரம் ஆகும். அதன்படி ஒருவரின் ஜனன காலத்தின் போது (பிறந்த நேரத்தின் போது) சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அந்த நட்சத்திர அதிபதியின் தசை தான் அவருக்கு ஆரம்ப தசையாக வரும்.

இன்னும் தெளிவாக கூறுகிறேன்.. அதாவது ஒரு ஜாதகர் பிறக்கின்ற பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசை தான் ஆரம்ப தசையாக வரும்.

உதாரணத்திற்கு ஒருவர் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதன் அதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு ஆரம்ப தசையாக வரும். அதன் பிறகு சூரிய தசை, சந்திர தசை என்ற வரிசையில் தொடரும். மேலும் ஒரு உதாரணத்திற்கு, ஒருவர் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறப்பதாக வைத்துக்கொள்வோம். இங்கே சந்திரன் சுயச்சாரத்தில் அதாவது தன் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் சந்திர தசையே ஆரம்ப தசையாக வரும். அதன் பிறகு செவ்வாய் தசை, ராகு தசை, குரு தசை என்ற வரிசையில் தொடரும்.

அடுத்தாக ஒரு கிரகம் தசை நடத்துகிறது என்றால் அந்த கிரகத்தின் ஆதிக்கம் சற்று ஓங்கி இருக்குமே தவிர ஜாதகரின் மேல் முழு ஆதிக்கம் செலுத்தாது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தசையிலும் மற்ற எட்டு கிரகங்களும் தசாநாதருடன் கைக்கோர்த்து தன் பங்கிற்கு ஜாதகர் மேல் ஆதிக்கம் செலுத்தும். இந்த பங்குகள் தான் புத்தி என்று அழைக்கப்படுகிறது.

அதாவது ஒரு தசையில் உள்ள மொத்த வருடங்களை சமப்பங்குகளாக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் கொண்டு ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். 

இதன் விளக்கம் என்னவெனில் அனைத்து கிரகங்களின் புத்திகளையும் உள்ளடக்கியதே ஒரு கிரகத்தின் தசை ஆகும். அடுத்து இதே போன்று, ஒரு புத்தியை ஒன்பது பகுதிகளாக பிரிப்பது அந்தரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு தசையில் புத்தி, அந்தரம், சூட்சமம் என குறுகிக் கொண்டே போகலாம். எந்த ஒரு தசையிலும் தசாநாதரின் புத்தியே (சுயபுத்தி) முதலாவதாக இடம்பெறும். உதாரணமாக குரு தசையில் முதலில் குரு புத்தியும் அடுத்து சனி புத்தி அதற்கடுத்து புதன் புத்தி என்ற வரிசையில் தொடரும்.

அதேபோல் எந்த ஒரு புத்தியிலும், புத்திநாதரின் அந்தரமே முதலாவதாக இடம்பெறும். உதாரணமாக குரு தசை சனி புத்தியில் முதலில் சனி அந்தரமும் அடுத்து புதன் அந்தரம், கேது அந்தரம், சுக்கிரன் அந்தரம், சூரிய அந்தரம் என்ற வரிசையில் தொடர்ந்து கடைசியில் குரு அந்தரம் முடிந்தவுடன் சனி பத்தி முடிவடைந்து அதே குரு தசையில் பிறகு புதன் புத்தி ஆரம்பமாகும்.

இவ்வாறு ஒரு தசையில் உள்ள உட்பிரிவுகளான புத்தி, அந்தரம், சூட்சமங்களைக் கொண்டு ஒருவரின் ஜாதக பலனை துள்ளியமாக கூற முடியும். அதாவது தசை என்பது நீண்ட காலம். அதில் உள்ள புத்தி, அந்தரம், சூட்சமம் என நுட்பமாக ஆராய்ந்தால் தான் பலனை துள்ளியமாக கணிக்க முடியும்.

உதாரணத்திற்க்கு ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர் ஒருவருக்கு 20 வயது முதல் 40 வயது வரை ஜாதகத்தில் திருமணத்திற்க்கு சாதகமான அம்சங்களை வைத்திருக்கும் சுக்கிரனின் தசை நடப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் தனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று ஜோதிடரை பார்த்து கேட்கும் பொழுது உங்களுக்கு திருமணத்திற்கு சாதகமாக உள்ள இந் சுக்கிரனின் தசையில் அதாவது இந்த 20 வருட காலத்திற்க்குள் திருமணம் ஆகும் என்று சொல்வது கேளிக்குரிய விஷயமாகும். அவர் ஜோதிடம் பார்க்க வந்ததற்க்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். இது போன்ற சூழ்நிலைகளில் தான் ஒரு தசையின் உட்பிரிவுகளான புத்தி, அந்தரம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேற்கண்ட உதாரணப்படி சுக்கிரன் திருமணத்திற்கு சாதகமான அம்சங்களை கொண்டிருக்கும் பொழுது அவருடைய சுயபுத்தியல் திருமண நடைபெற வாய்ப்பு இல்லையெனில்; வேறு ஏதாவது ஒரு கிரகம் திருமண அமைப்பிற்கு சாதகமாக உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். அப்படி இருந்தால் அந்த கிரகத்தின் புத்தி எந்த காலக் கட்டத்தில் வருகிறதோ அந்த சமயத்தில் தான் திருமணம் நடக்கும் என்பதை தெளிவாக கூற முடியும். இன்னும் ஒரு படி மேல் துள்ளியமாக பார்க்க வேண்டுமெனில் அந்த புத்தியில் உள்ள அந்தரம் மற்றும் சூட்சமங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு தசை என்பது..

9 புத்திகள் 81 அந்தரங்கள் மற்றும் 729 சூட்சமங்களை உள்ளடக்கியது ஆகும். 20 வருடங்களை கொண்ட சுக்கிர தசையில் ஒரு சூட்சமம் என்பது அதிகபட்சம் சுமார் 34 நாட்களாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகத்தில் உள்ள விதிப்படி, ஒரு கிரகம் நன்மை செய்வதாக இருந்தாலும் அல்லது தீமை செய்வதாக இருந்தாலும் அதன் தசாபுத்தி காலங்களில் தான் அதனை வெளிப்படுத்தும் எனக் கூறி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன். 

கொடுப்பினை என்கிற விதி என்றால் என்ன? (AAF001)

         ஒரு குழந்தை தன் தாயின் கருவறையிலிருந்து வெளியேறி, இப்பிரபஞ்சத்தில் உள்ள காற்றை சுவாசிக்கும் வினாடியே அந்த குழந்தையின் பிறந்த நேரமாகக் கணக்கிடப்படுகிறது.

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நவக்கிரகங்களின் வாயிலாக தான் இறைவன் நாம் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துகின்றார் என்பது எனது தாழ்வான கருத்தாகும். எல்லாம் வல்ல அந்த இறைசக்தியை நாம் உணர முடியாவிட்டாலும் நவகிரகங்களின் நிலைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது தான் ஜோதிடத்தில் மறைந்திருக்கின்ற மிகப் பெரிய சூட்சமம்.

ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதிய விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு கிரகமும் தன்னுள் வைத்துள்ள தாதுப் பொருட்கள் மற்றும் அதனின் நிறம், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு  பூமியில் செலுத்தும் கதிர்வீச்சுகளின் மூலம் மனிதர்களை பல மாற்றுதல்களுக்கு உட்படுத்துகின்றன. நம் முன்னோர்கள் ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் எவ்வாறு மனித உயிர்களில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்பதை உணர்ந்து ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சில காரகங்களை தொகுத்து வழங்கினார்கள்.

அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் நிற்காமல் பன்னிரெண்டு பாவங்கள் உள்ளடங்கிய ராசி மண்டலத்தை சுற்றி வருகின்றன. மேலும் ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சின் தன்மை மற்றும் அளவு என்பது அதன் இருப்பிடத்தை (பாவத்தை) பொருத்து வேறுபடுகிறது என்பதை உணர்ந்து பன்னிரெண்டு பாவங்களுக்குள்ளும் ஒன்பது கிரகங்களின் காரகங்களை தொகுத்துள்ளார்கள்.

காரகம் என்பதை ஆங்கிலத்தில் சிக்னிவிகேட்டர்(significator) என்று கூறுவார்கள். அதாவது ஒன்றனை பற்றி குறிப்பிடுவது ஆகும்(signifies something). பொதுவாக ஜோதிடத்தில் காரகம் என்பது ஒரு கிரகமோ/பாவமோ ஒரு விஷயத்தினை பற்றி குறிப்பிடுவது ஆகும்.(A planet/bhava that signifies something).

உதாரணத்திற்கு..
கல்விக்கு புதன் கிரக காரகமாகும்; பாவ காரகத்தில் நான்காம் பாவம் அடிப்படை கல்வியையும், ஒன்பதாம் பாவம் உயர்நிலைக் கல்வியையும் குறிப்பிடுகின்றது. ஆக ஒருவரின் கல்வியைப் பற்றி தெரிந்து கொள்ள புதன் கிரகத்தையும், நான்காம் பாவத்தையும் (அடிப்படை கல்வி), ஒன்பதாம் பாவத்தையும் (உயர்நிலைக் கல்வி) ஆய்வு செய்ய வேண்டும்.

மேற்கண்ட இரண்டும் (கிரக காரகம், பாவ காரகம்) தான் ஒருவரின் விதியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றாலும் மேலும் சில காரணிகள் உள்ளன.

அதாவது நல்ல பலன்களோ, தீய பலன்களோ அதை அனுபவிப்பது லக்னம் என்ற ஜாதகர் தானே. மேலும் எந்த ஒரு காரகத்தையும் (விஷயத்தையும்) அனுபவிக்கும் ஆற்றல் இருந்தாலும் அதில் லக்னம் என்ற ஜாதகருக்கு சிறிதளதாவது முயற்சியும், ஈடுபாடும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஜாதகர் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியும். ஆக ஒருவரின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் லக்ன பாவத்திற்கும் சிறிதளவு பங்கு இருக்கின்றது.

கடைசியாக ஒருவரின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் ஒன்பதாம் பாவத்திற்கும் சிறிதளவு பங்கு உண்டு. ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் தெய்வத்தை குறிக்கின்ற பாவமாகும். ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் வலுவாக இருந்தால் அவருக்கு தெய்வ அனுக்கிரகம் உள்ளது என அர்த்தம்.

ஒரு ஜாதகரின் விதியை பாவ காரகம் 40 சதவிகிதமும், கிரக காரகம் 40 சதவிகிதமும், லக்ன பாவம் 15 சதவிகிதமும், ஒன்பதாம் பாவம் 5 சதவிகிதமும் நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு ஆண் ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கான விதியை நிர்ணயிப்பது 40% ஏழாம் பாவமும், 40% சுக்கிரனும், 15% லக்ன பாவமும், 5% ஒன்பதாம் பாவமும் ஆகும்.


ஒருவர் ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலம் அவரின் தோற்றம், குணம், ஆரோக்கியம், அந்தஸ்து, தனநிலை, சொத்து, திருமண வாழ்க்கை, உத்தியோகம், தொழில், நண்பர்கள் மற்றும் அவர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவாரா!! கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பாரா அப்படியெனில் எதன் ரீதியில் அனுபவிப்பார் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு சிலர்..... சரி ஒருவர் பிறக்கின்ற நேரத்தை பொருத்து தான் அவரது விதி அமைகிறது எனில் ஒரு நல்ல நேரத்தை குறித்து கொண்டு சிசேரியன் முறையில் குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வர முடியுமே என நினைக்கிறார்கள். ஜோதிடம் கற்ற ஆரம்ப காலத்தில் எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் எழுந்தது தான்.. 


ஆனால் அனுபவத்தில் இது பற்றி நான் தெரிந்து கொண்டதை இப்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது சிசேரியன் முறை என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மற்ற அறுவை சிகிச்சை முறைகளை காட்டிலும் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். மேலும் இது பற்றி அறிந்து கொள்ள மருத்துவ துறையில் உள்ள எனது நண்பரின் ஆலோசனையும்; கூகுளில் அலசியபோது கிடைத்த தகவல்களும் பெரிதும் உதவின. 

ஒரு சிசேரியன் முறையை வெற்றிகரமாக முடிக்க குறைந்தது 2 நிமிடமும் அதிகபட்சம் 45 நிமிடங்களும் ஆகும். இந்த 2 நிமிட அனுகுமுறையை கூட மருத்துவர்கள் அவரச காலத்திற்கு(in an emergency case) மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உயர் கணித சார ஜோதிடப்படி ஒவ்வொரு 30 வினாடிக்கும் விதி கொடுப்பினை மாறிக் கொண்டே இருக்கும். இப்படியிருக்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் இந்த இயற்கைக்கு மாறான சிசேரியன் முறையை கையாள்வது சற்றும் இயலாத காரியம் அல்லது மிக மிக கடினமான காரியம் என்றே நான் கூறுவேன்.

ஒருவரின் விதி என்கிற கொடுப்பினை என்பது அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவ அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது. இதை நான் அனுபவ பூர்வமாக உணராவிட்டாலும் இது பற்றி நம் முன்னோர்கள் எழுதிய நூல்களை படித்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். ஒருவரை பார்த்து ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தேதியில் உனக்கு என்ன நடந்தது என்று கேட்டால் அவர் பதிலளிக்க சற்று யோசிக்கும் பொழுது போன ஜென்மத்தில் நடந்தது மட்டும் எப்படி நம்மை போன்ற மனிதர்களுக்கு ஞாபகம் இருக்கும். 

ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல பிரம்மனுக்கு தெரிந்த ரகசியம். ஆக ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவத்தை மையமாக வைத்து நவகிரகங்களின் உதவியோடு நம்மை போன்ற மனிதர்களின் விதியை நிர்ணயிப்பது எல்லாம் வல்ல பிரம்மன் எனக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்..

ஜோதிடரின் கடமை.. (AAB002)

தினமும் இரவு பகல் மாறி மாறி வருவது போல வாழ்க்கை என்பது இன்பம் துன்பம், ஏற்றம் இறக்கம், வெற்றி தோல்வி, இஷ்ட கஷ்டங்கள் கலந்தது தான். 

இன்று உலகமே இரவில் மின்விளக்கால் ஒளிர்கிறது என்றால் அதற்கு மறைந்த அறிவியல் விஞ்ஞானி திரு. தாமஸ் அல்வா எடிசன் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. திரு. தாமஸ் அல்வா எடிசன் அவர்கள் தனது நீண்ட கால ஆராய்ச்சியின் மூலம் 19-ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மின்விளக்கை கண்டுபிடித்தார். 

அவரிடம் ஒரு நிருபர் இதை கண்டுபிடிக்கும் பொழுது 1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதன் அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார். அப்போது திரு. எடிசன் அவர்கள் நான் 1000 முறை தோல்வியுறவில்லை 1000 படிக்கற்களை கடந்து தான் இதை கண்டுபிடித்தேன் என்று கூறினார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நல்ல தீய பலன்கள் கலந்ததுதான். சில தடைகளை தாண்டி வந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது தான் நிரந்தர வெற்றியாகும்.

ஒரு ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளரிடம் அவரின் ஜாதகத்தை ஆய்வு செய்த பின்பு வாடிக்கையாளரை குஷிபடுத்துவதற்காக அதில் உள்ள நல்ல பலன்களை மட்டும் எடுத்துரைக்காமல் சிறு சிறு தீய பலன்களையும் மென்மையாக கூறி அதனை எப்படி சமாளிப்பது என்பதனையும் விளக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.
 

இதற்கு நான் ஒரு சிறிய உதாரணம் கூற விரும்புகிறேன். 
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒருவர் ஒரு இடத்தில் நின்று அங்கு உள்ள ஒரு பெரியவரிடம் இனி வரவிருக்கும் சாலை எப்படி இருக்கும் எனக் கேட்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு அந்த பெரியவர் வரவிருக்கும் சாலை அற்புதமாக இருக்கும் விரைவாக செல்லலாம் என்று கூறுவதை காட்டிலும் வரவிருக்கும் சாலை அற்புதமாக இருக்கும் விரைவாக செல்லலாம் ஆனால் அதே சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை/அபாய வளைவு உள்ளது அங்கு மட்டும் சற்று எச்சரிக்கையாக செல்லுங்கள் என்று கூறுவதே சிறப்பாகும்.


Thursday, 10 March 2016

ஜோதிடம் உண்மையா?அப்படியெனில் அதன் விளக்கம் என்ன?? (ABF001)

                            ஒரு சிலரிடையே ஜோதிடம் பொய், மூடநம்பிக்கை, பயனற்றது என்ற கருத்து நிலவி வருகிறது..

இப்பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எந்த ஒரு ஞானத்தோடும் பிறப்பதில்லை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை. அனைத்துக் குழந்தைகளும் பிறந்து வளரும் பொழுது தான் ஒவ்வொன்றையும் தன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குருக்கள் மற்றும் சில நூல்களின் வாயிலாக கற்றுக் கொள்கின்றன. ஒரு சிறு பரிணாம வளர்ச்சியாக இந்த காலத்துக் குழந்தைகள் தன் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஏதாவது ஒன்றனை பற்றி தெரிந்து கொள்ள கூகுள், யூடியுப் போன்ற இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.

எந்த ஒரு துறையிலும் சாதிப்பதற்கு மிக முக்கியமானது இரு காரணிகள். ஒன்று ஆராய்ச்சி, இன்னொன்று அனுபவம்.. இங்கே நான் இதை கூறிய நோக்கம் என்னவெனில்; ஜோதிடத்தின் வரலாறு மற்றும் அதன் சூட்சமங்களைப் பற்றி அறியாமல்; எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல், இதெல்லாம் பொய், மூடநம்பிக்கை என்ற கூறுவது எந்த விதத்தில் நியாயம்..??

சரி.. இவர்கள் இப்படி மாற்று கருத்து தெரிவிப்பதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தால்......

ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் ஜோதிடத்தில் சிறுது நம்பிக்கை இருந்திருந்தாலும், இடையில் சில அரைகுறையான  ஜோதிடர்களை அனுகி அவர்கள் சொன்ன வாக்கு பலிதம் ஆகாத காரணத்தினால் அவர்களுக்கு ஜோதிடத்தின் மேல் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

இது ஜோதிடரின் தவறா? அல்ல ஜோதிடத்தின் தவறா??

ஒருவர் தான் பிறந்த சரியான தேதி, சரியான நேரம், சரியான இடத்தைக் கொண்டு ஒரு சரியான ஜோதிடரை அனுகினால் பலனும் மிகச் சரியாகவே வரும்.. ஜோதிடம் எந்நாளும் பொய்க்காது, இது நம் முன்னோர்களின் வாக்கு. 

மேலும் சிலர்.. நாம் வாழும் பூமியிலிருந்து பல கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் எப்படி மனித உயிர்களை ஆளுமை செய்கின்றன; அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த மனிதர்களின் ஜாதகங்கள் என எப்படி தரம் பிரித்து தன் ஆதிக்கங்களை செலுத்துகின்றன என்று கேட்கிறார்கள்..

இதற்கு விளக்கங்கள் அளிப்பதற்கு முன், நான் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள்....

            
ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக பயணித்தாலும் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படுவதில்லை..
ஆனால் ஒரு சிலர் இதே இருசக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் பொறுப்புடன் பயணித்தாலும் எதிரே நிலை தடுமாறி தாறு மாறாக வரும் வாகனங்கள்  மோதி அந்த இடத்திலேயே உயிரிழப்பது ஏன். இதற்கு என்ன காரணம்..????

            ஒரு வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவதும், அதே வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைவதற்கே தடுமாறுவதும் ஏன்அவர்கள் அனைவரும் பயில்வது ஒரே பள்ளிக்கூடத்தில், ஒரே வகுப்பில் மற்றும் ஒரே பாடத் திட்டங்கள் தானே!! எல்லாவற்றிர்கும் மேல் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியரும் ஒருவர் தானே!! பிறகு யார் செய்கின்ற திருவிளையாடல் இது.

             
பெரும்பாலான இளைஞர்களின் கனவு இன்று படித்த முடித்தவுடன் நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே பயிலும் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும் நேர்காணலில் தேர்ச்சி பெற்று உடனடியாக எந்த வித சிரமமும் இல்லாமல் நல்லதொரு பணியில் அமர்கின்றார்கள். ஆனால், சிலர் நல்ல சராசரி மதிப்பெண்களை வைத்து எத்தனையோ நேர்காணலில் கலந்து கொண்ட போதிலும் ஒரு நல்ல வேலையில் அமராமல் இருப்பது ஏன்? இவர்கள் மட்டும் முயற்சி செய்வதில்லையா? நம்பிக்கையுடன் போராடுவதில்லையா? சரி திறமையும், ஈடுபாடும் தான் காரணம் எனில் திறமையிலும், ஈடுபாட்டிலும் இவர்களுக்குள் ஏன், ஏதற்கு, இந்த வேறுபாடு!!!!

             
நமது வாழ்வின் பெரும்பகுதியான திருமண வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது ஆகும். ஏனெனில் இந்த திருமண வாழ்க்கை தான் ஒரு சிலரது வாழ்வில் திருப்புமுனையாக அமைகிறது. ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவோ வசதிகள் மற்றும் நல்ல குணங்கள் இருந்தும் நூறுக்கும் மேற்பட்ட வரன்களை பார்த்தும் திருமண வாழ்க்கை ஒரு தடையாக இருப்பதும், மற்றவர்களுக்கு பார்த்த ஒன்று இரண்டு வரன்களில் ஒன்று க்ளிக் ஆகி சரியான பருவத்தில் திருமணம் நடப்பதும் ஏன்..?? முயற்சி மட்டும் தான் காரணம் என்றால் நூறுக்கு மேற்பட்ட வரன்களை பார்ப்பவர்கள் தானே அதிகமாக முயற்சி செய்கிறார்கள்..??

             
கடைசியாக ஒரு கேள்வி இவ்வுலகில் ஒரு சில குழந்தைகள் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கு வாரிசாக பிறந்து இன்பமாக வாழ்வதும்; சில குழந்தைகள் ஒரு வேளை உணவிற்கே கஷ்டப்படும் ஏழைகளுக்கு வாரிசாக பிறந்து இளமையில் துன்பத்தை அனுபவிப்பதும் ஏன்..?? ஏன் இந்த மிகப் பெரிய வேறுபாடு.. யார் செய்கிற திருவிளையாடல் இது..

இது போன்று பல கேள்விகள் என்னால் கேட்க முடியும். ஆனால் கட்டுரையின் நீளத்தை மனதில் கருதி இத்துடன் நிறுத்திக் கொண்டு அதற்கான விளக்கங்களை தற்பொழுது கூறுகிறேன்.

மேற்கண்டவற்றில் உள்ள வேறுபாடுகளிலிருந்து ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிகிறது. நாம் எல்லோரையும் கட்டுப்படுத்தும் ஏதோ ஒரு சக்தி இப்பிரபஞ்சத்தில் உள்ளது. ஆம்.. அது தான் இறைசக்தி. எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் நவக்கிரகங்களின் வாயிலாக நம் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துகின்றார் என்பது எனது தாழ்வான கருத்தாகும்.

எல்லாம் வல்ல அந்த இறைசக்தியை நாம் உணர முடியாவிட்டாலும் நவகிரகங்களின் நிலைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது தான் ஜோதிடத்தில் மறைந்திருக்கின்ற மிகப் பெரிய சூட்சமம்.
ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதிய விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய/பாவத்தின் அடிப்படையில் தான் இந்த விதி  நிர்ணயிக்கப்படுகிறது.

சரி.... கிரகங்கள் எப்படி மனிதர்களை ஆளுமை செய்கின்றன??

நம் முன்னோர்கள், ஞானிகள் மற்றும் ரிஷிகளால் கிரகங்களின் தலைவனாக போற்றப்படும் சூரியனையே எடுத்துக்கொள்வோம். சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. இதன் விளக்கம் இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் யாவும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அதனின் வெப்பத்தினை ஓர் ஆதாரமாக கொண்டு தான் இயங்குகின்றன. அதாவது தாவரங்களின் வளர்ச்சிக்கு பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் ஓர் ஆதாரமாக இருந்தாலும் சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்மைப் போன்ற மனிதர்களுக்கும் இந்த சூரியனின் வெப்பம் மற்றும் அதனின் ஒளி மிக முக்கியமானது ஆகும். ஒரு மனிதனுடைய சராசரி வெப்பநிலை என்பது 37°C ஆகும். இது அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ தான் காய்ச்சல், தலைவலி போன்ற வியாதிகள் உண்டாகிறது. ஆக மனித உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த சூரியனின் தட்ப வெப்பநிலை மிக முக்கியமானது என்பதே நான் இங்கே சொல்ல வந்த கருத்து. உதாரணமாக சூரிய ஒளியின் தாக்கம் மிகக் குறைவாக உள்ள அண்டார்டிக்கா கண்டத்தில் (குளிர் பிரதேசம்) நாம் உயிர் வாழ முடியுமா?? இப்படிப்பட்ட சூரியன் ஒரு நாள் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்து போய் விடும் என்றால் அது மிகையாகாது.

எந்த ஒரு கிரகத்திற்கும் சுய ஒளி என்பது கிடையாது. ஒவ்வொரு கிரகமும், கிரகங்களின் தலைவனாக போற்றப்படும் சூரியனிடம் இருந்து தான் ஒளியை பெறுகின்றன. இது நம் விஞ்ஞானிகளால் நிரூபணம் செய்யப்பட்ட ஒரு  உண்மை. ஒவ்வொரு கிரகமும் சூரியனின் ஒளியை உள்வாங்கி தன்னுள் வைத்துள்ள தாதுப் பொருட்கள் மற்றும் அதனின் நிறம், தட்ப வெப்ப நிலைகள் போன்றவற்றை ஆதாரமாக கொண்டு பூமியில் செலுத்தும் கதிர்வீச்சுகளின் மூலம் மனித உயிர்களை ஆளுமை செய்கின்றன.

சரி!! கிரகங்கள் மனிதர்களை ஆளுமை செய்கின்றன என்று எடுத்துக் கொண்டாலும்; அது எப்படி ஒவ்வொருவரின் ஜாதகங்களையும் தரம் பிரித்து கிரகங்கள் ஆளுமை செய்கின்றன என்று இப்போது கேட்கலாம்.. 

சற்று பொறுமையாக இருங்கள் அதையும் விளக்குகிறேன்..
ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் வளரும் பொழுது எந்த ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சுகளையும் பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்த குழந்தை பிறந்த உடன், வான்மண்டலத்தில் உள்ள ஒன்பது கிரகங்களும்; தன் நிலையை (இருப்பிடத்தை) பொருத்து வேறுபடும் கதிர்வீச்சுக்களை கொண்டு ஒரு காந்த புலத்தை (magnetic field) அந்த குழந்தையின் மேல் உருவாக்குகின்றது

இதை தான் நம் முன்னோர்கள் ஆண்டவன் எழுதிய தலையெழுத்து (காந்த புலம்) என்று கூறி வந்தார்கள். இந்த காந்த புலத்தை பொருத்து தான் ஒருவரின் விதி அமையும். அதாவது இந்த காந்த புலத்தை மையமாக கொண்டு தான் ஒருவரின் குணம், செயல் திறன், தோற்றம், சுய சிந்தனை போன்ற காரகங்கள் நிர்ணயமாகும்அனைத்து கிரகங்களும் வான்மண்டலத்தில், ஒவ்வொரு நொடியும் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இதன் காரணமாக தான் நம் பூமியில் விழும் ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சுக்களும் நிலையாக இல்லாமல் அதன் தன்மை மற்றும் அளவில் அவ்வப்போது வேறுபடுகின்றன.

மேலும், ஒரு குறிப்பட்ட நேரத்தில் சூரிய ஒளியானது நம் வாழும் இந்த பூமியில் எந்த பகுதியில் விழுகிறதோ அதை பொருத்து தான் லக்னம் தீர்மானிக்கபடுகிறது. பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் ஓர் நீள் வட்ட பாதையில் சூற்றி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் தான் லக்னம் என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இதன் காரணமாக தான் ஒருவரின் ஐாதகத்தை கணிதம் செய்வதற்கு அவர் பிறந்த இடமும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு ஆற்றல் கதிர்களை இப்பூமியின் மேல் செலுத்துகின்றன. நம் முன்னோர்கள் ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் எவ்வாறு மனித உயிர்களில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்பதை உணர்ந்து ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சில காரகங்களை தொகுத்து வழங்கினார்கள்.

அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் நிற்காமல் பன்னிரெண்டு பாவங்கள் உள்ளடங்கிய ராசி மண்டலத்தை சுற்றி வருகின்றன. மேலும் ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சின் தன்மை மற்றும் அளவு என்பது அதன் இருப்பிடத்தை (பாவத்தை) பொருத்து வேறுபடுகிறது என்பதையும் உணர்ந்து பன்னிரெண்டு பாவங்களுக்குள்ளும் ஒன்பது கிரகங்களின் காரகங்களை தொகுத்துள்ளார்கள். ஜோதிடத்தில் இந்த பாவ காரகத்தையும் கிரக காரகத்தையும் கொண்டு தான் பலன்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இறுதியாக நம் முன்னோர்கள், கிரகங்கள் நம்மை ஆளுமை செய்கின்றன என்பதனை உணர்த்தவே ஒரு வாரத்தில் உள்ள 7 கிழமைகளுக்கும் 7 கிரகங்களின் பெயர்களை வைத்து;

ஞாயிற்றுக் கிழமை     -  சூரியன்
திங்கட்கிழமை              -  சந்திரன்
செவ்வாய் கிழமை       -  செவ்வாய்
புதன் கிழமை                 -  புதன்
வியாழக் கிழமை         -  குரு
வெள்ளிக் கிழமை        -   சுக்கிரன்
சனிக் கிழமை                -   சனி

நிழல் கிரகங்களான ராகு கேதுக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை (ராகு - ராகு காலம்; கேது - எமகண்டம் காலம்) ஒதுக்கி வைத்தார்கள்.

எல்லாம் வல்ல அந்த இறைசக்தியால் உருவாக்கப்பட்ட கிரகங்கள் நம்மை ஆளுமை செய்கின்றன என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது என்பது எனது தாழ்வான கருத்தாகும். ஒருவர் இப்பிரபஞ்சத்தில் பிறந்த நேரத்தின் பொழுது இருந்த, இந்த நவகிரகங்களின் நிலையைக் கொண்டு பலனுரைக்கப்படும் ஜோதிடமும் மெய் என்று கூறி, நவக்கிரகங்களையும் வணங்கி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.