Tuesday 20 September 2016

சார ஜோதிட புத்தகங்கள் வாங்க, சார ஜோதிடம் கற்க

சார ஜோதிட புத்தகங்கள்

"சார ஜோதிட சக்கரவர்த்தி"
உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்கள் இயற்றிய உயர் கணித சார ஜோதிட புத்தகங்கள்..

KB ஜோதிட முறையில்
"விதியும், மதியும்"                        
                                                     ₹ 120

KB ஜோதிட முறையில்
"ஜாதக பலன் நிர்ணயம் பாகம்-1"
                                                     ₹ 75

KB ஜோதிட முறையில்
"ஜாதக பலன் நிர்ணயம் பாகம்-2" 
                                                     ₹ 120

உயர் கணித சார ஜோதிட முறையில்
"கொடுப்பினையும் தசாபுத்திகளும் 
                                                     ₹ 250

உயர்கணித சார ஜோதிட முறையில்
"திருமணமும் தாம்பத்யமும் 
                                                     ₹ 130

உயர்கணித சார ஜோதிட முறையில்
"ஜாதகமும் தொழில் அமைப்பும்" 
                                                     ₹ 130

உயர்கணித சார ஜோதிட முறையில்
"மருத்துவ ஜோதிடம்"        
                                                     ₹ 200

உயர்கணித சார ஜோதிட முறையில்
"ஜாதகத்தில் கல்வி"            
                                                     ₹ 150

10-ம் ஆண்டு சங்க மாநாட்டு மலர்  
(அகில இந்திய சார ஜோதிட சங்கம்)     
{ஜோதிட அறிஞர்கள் பலரால் எழுதப்பட்ட 57 கட்டுரைகள் உள்ளடங்கியது ஆகும்.}
                                                     ₹ 200

மேற்கண்ட சார ஜோதிட புத்தகங்களை பெற, சார ஜோதிடம் கற்க, எதிர்கால பலன்கள் அறிய எம்மை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சியை தவிர மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு புத்தகங்கள் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

ஜோதிஷ ஆதித்யா. அருண் சுப்ரமணியன்,
திருச்சிராப்பள்ளி.
செல்: 8344407600, 9677535240
மின்னஞ்சல்: sharmilajothidam@gmail.com
இணையதளம்: www.astroarun.com

Friday 13 May 2016

விதி, மதி, கதி - ஓர் ஆய்வு


விதி என்றால் கொடுப்பினை;
மதி என்றால் தசாபுத்தி;
கதி என்றால் கோச்சாரம் ஆகும்..

ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதிய விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது.

மதி என்றால் சந்திரன்/நிலவு
ஒரு ஜாதகர் பிறந்த பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருந்ததோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரமாக வரும். ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜென்ம நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) தசை தான் ஆரம்ப தசையாக வரும். இதனை தொடர்ந்து மற்ற கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தன் தசையை நடத்தும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த தசாபுத்தியை தான் "மதி" என்று சுருக்கமாக நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள்..

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிகளை (நிலைகளை) பற்றி தெரிவிப்பது தான் கோச்சாரம் ஆகும். இந்த கோச்சாரத்தை தான் கதி என்று நம் முன்னோர்கள் சுருக்கமாக கூறி வந்தார்கள்..

இப்பொழுது திருமண வாழ்க்கையை ஓர் உதாரணமாக முன்வைத்து; ஜோதிடத்தில் கொடுப்பினை, தசாபுத்தி, கோச்சாரம் ஆகிய இம்மூன்றும் ஜோதிடத்தில் எந்த அளவு முக்கியத்துவத்தை பெறுகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறேன்.

ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான கொடுப்பினையை நிர்ணயிப்பது அவர் ஜாதகத்தில் உள்ள ஏழாம் பாவம், களத்திர காரகன் சுக்கிரன்/செவ்வாய், லக்ன பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் ஆகும். களத்திரம் என்றால் கணவன் அல்லது மனைவி என்பது பொருள்.. அதாவது வாழ்க்கை துணை என பொருள் கொள்ளலாம். மேலும் களத்திர காரகன் என்றால் வாழ்க்கை துணையை பற்றி குறிக்கும் கிரகம் ஆகும்.

ஜோதிடத்தில் சுக்கிரன் பெண் கிரகமாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் அழைக்கப்படுகிறது. அதனால் தான் ஜோதிடத்தில் ஒரு ஆண் ஜாதகருக்கு சுக்கிரன் களத்திர காரகராகவும்; பெண் ஜாதகருக்கு செவ்வாய் களத்திர காரகராகவும் வருகிறார்கள்.

இனி, ஒரு ஆண் ஜாதகரை மையமாகக் கொண்டு விளக்கங்களை தொடருகிறேன்.
பொதுவாக ஜோதிடத்தில் 8-ம் பாவம் என்பது வலி, வேதனை, அவமானம் போன்ற காரகங்களையும், 12-ம் பாவம் என்பது இழப்பு, விரையம், தோல்வி போன்ற காரகங்களையும் உடையதாகும். அடுத்து களத்திர ஸ்தானமான 7-ம் பாவத்தை கெடுக்கக் கூடிய ஆற்றல் 7-க்கு 12-ம் பாவமான 6-ம் பாவத்திற்கு உண்டு. ஆதலால் 6,8,12 போன்ற பாவங்கள் திருமண வாழ்க்கைக்கு எதிரான பாவங்களாகும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் உள்ள ஏழாம் பாவ ஆரம்ப முனையின் உப மற்றும் உபஉப நட்சத்திர அதிபதிகளையும்; சுக்கிரனையும் ஆய்வு செய்தால் அந்த ஜாதகருக்கு அமையக் கூடிய மனைவியின் தோற்றம், குணம், தனநிலை போன்றவற்றையும் திருமண வாழ்க்கை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு ஆண் ஜாதகத்தில் இந்த 7-ம் பாவமும், சுக்கிரனும் எந்த காரணத்தை கொண்டும் வலுவிழக்கக் கூடாது. 7-ம் பாவம் வலுவிழந்து பாதிக்கப்பட்டால் திருமண வாழ்க்கை அமைவதில் ஆரம்பத்தில் சில தடைகள் வரக்கடும். பொதுவாக 7-ம் பாவம் என்பது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் சந்திக்கக் கூடிய தமக்கு சமமான நபர்களையும் குறிக்கும். 7-ம் பாவம் மட்டும் பாதிக்கப்பட்டு; களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகர் தான் சந்திக்கும் சமூகத்தினரிடம் அவ்வப்போது சில பிரச்சனைகளை எதிர்கொள்வாரே தவிர திருமண வாழ்க்கை என்பது சிறப்பானதாக இருக்கும். ஒரு வேளை சுக்கிரன் பாதிக்கப்பட்டு, என்ன தான் 7-ம் பாவம் வலுவாக இருந்தாலும், ஜாதகர் தன் திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேற்கண்ட இரண்டும் (7-ம் பாவம், சுக்கிரன்) பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கை என்பது சற்று யோசிக்க கூடிய விஷயமாக ஆகிவிடும். இங்கே மற்ற காரணிகளான லக்ன பாவத்தையும், ஒன்பதாம் பாவத்தையும் ஆய்வு செய்வது அவசியம்.

லக்ன பாவம் என்பது ஒரு ஜாதகரின் சுயமுயற்சி, குணம், ஈடுபாடு மற்றும் அவர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய யோகங்களை பற்றி தெரிவிக்கும். இல்லற வாழ்க்கையை எப்படியும் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியுமா என்பது லக்ன பாவத்தை ஆய்வு செய்வதன் மூலம் தெரியவரும்.

9-ம் பாவம் என்பது தெய்வத்தை குறிக்கின்ற பாவமாகும். தெய்வ அனுக்கிரகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை அறிய இந்த பாவத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
7-ம் பாவமும், சுக்கிரனும் பாதிக்கப்படும் பொழுது;  ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை அனுபவிக்கும் யோகமும், தெய்வ அனுக்கிரகமும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இவ்விரு பாவங்களையும் ஆய்வு செய்வது அவசியமானது என்பதே நான் இங்கே கூற வந்த கருத்து.. 

ஒரு வேளை இந்த லக்ன பாவமும், 9-ம் பாவமும் திருமணத்திற்கு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும் கூட திருமணம் என்பது உடனடியாக (பருவ வயதில்) நடைபெறாது. இவ்விரு பாவங்களும் நன்றாக இருந்தாலும் கூட; முக்கியமான காரணிகளான 7-ம் பாவமும் சுக்கிரனும் கெட்டுவிட்டதால் மிகுந்த கால தாமதத்திற்கு பின்னரே நடைபெறும். இங்கே ஜாதகர் ஆண் என்பதால் 33 அல்லது 35 வயதிற்கு மேல் திருமணம் ஆகும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மாறாக 7-ம் பாவம் மற்றம் சுக்கிரனை போல் இந்த லக்ன மற்றும் 9-ம் பாவமும் சேர்ந்து திருமணத்திற்கு எதிரான பாவங்களை தொடர்பு கொண்டு கெட்டிருந்தால் திருமண வாழ்க்கையே அமையாது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. என்னை பொருத்த வரை, இது போன்ற அமைப்புடைய ஜாதகர்களுக்கு திருமண பேச்சே எடுக்காமல் இருப்பது நல்லது.

காரணம் விதி கொடுப்பினை (7-ம் பாவம், சுக்கிரன், லக்ன பாவம், 9-ம் பாவம்) என்பது திருமண வாழ்க்கையை முழுவதுமாக தடுக்கிறது. மதி என்கிற தசாபுத்தி என்ன தான் வலுவாக இருந்தாலும் திருமணம் கைகூடுவது போல் தெரியும் ஆனால் கைகூடாது. இது போன்ற ஜாதகங்களுக்கு மீறி திருமணம் நடந்து 3 மாதத்திற்குள் விவாகரத்து ஆனாலும் அதில் ஆச்சிரயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஒரு ஆணின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பொருத்த வரை....

விதி என்கிற கொடுப்பினை வலுவாக இருந்து; மதி என்கிற தசாபுத்தியும் வலுவாக இருந்தால் ஜாதகருக்கு பருவ வயதிலேயே திருமணம் நடைபெறும். மேலும் திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்பதற்கே இடமிருக்காது. தம்பதிகளுக்குள் அன்யோன்யம் என்பது மிக அதிகமாக காணப்படும்.

கொடுப்பினை வலுவாக இருக்கும் பட்சத்தில்; தசாபுத்தி வலுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிதளவு ஒத்துழைப்பு கொடுத்தாலே (மத்திமமாக இருந்தாலே) போதும். திருமண வாழ்க்கை சரியான பருவத்தில் அமைந்து ஓரளவு மகிழ்ச்சிக்குரியதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.

கொடுப்பினை வலுவாக இருந்து; தசாபுத்தி பாதகமான நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அதாவது அந்த மோசமான தசாபுத்தி காலங்களின் போது மட்டும் தடை ஏற்பட்டு பின்பு நல்ல தசா புத்திகள் வரும் பொழுது திருமணம் கைகூடி மகிழ்ச்சிக்குரிய வாழ்க்கையாக அமையும். விதி என்னதான் நன்றாக இருந்தாலும் மதி என்கிற தசாபுத்தி சிறிதளதாவது கைக்கொடுக்க வேண்டும்.

கொடுப்பினை மத்திமமாக இருக்கும் பட்சத்தில்; தசாபுத்தி வலுவாக இருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறது. அதாவது இங்கே மதி என்கிற தசாபுத்தி திருமண வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். இல்லையெனில் திருமணம் தள்ளி போகவோ, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரவோ வாய்ப்பு உள்ளது..

கொடுப்பினை மறுக்கப்படும் பொழுது (மோசமான விதி) என்ன தான் தசா புத்திகள் வலுவாக அமைந்தாலும் திருமண வாழ்க்கை என்பது காணல் நீர் போல தான். அப்படி மீறி நடந்தாலும் தசாபுத்திகள் மாறும் பொழுது திருமண வாழ்க்கை என்பது நரகமாக மாறும். விவாகரத்து வரை கூட சென்று விடும்.

கொடுப்பினை தசாபுத்தி ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டால் திருமணமே நடைபெறாது என்பதை உறுதியாக கூற முடியும்.

இது வரை விதி மற்றும் மதியை ஒப்பிட்டு விளக்கம் கூறி வந்தேன். அடுத்து கதி என்ற கோச்சாரத்தை இவ்விரண்டுடன் ஒப்பிட்டு அதனின் முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாம்..

இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல பொதுவாக சார ஜோதிட முறைப்படி 6,8,12 போன்ற பாவங்கள் திருமண வாழ்க்கையை எதிர்க்கின்ற பாவங்களாகும். 

ஒரு பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் அந்த பாவ ஆரம்பமுனையின் உப நட்சத்திர அதிபதியாக வரும் கிரகத்திற்கே வலிமை அதிகம்.

ஒரு ஜாதகத்தில் வேகமாக சுற்றும் (நகரும்) கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியோர்கள் 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக வந்தால் கோச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் மேற்சொன்ன கிரகங்கள் ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 15 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

ஆனால், மெதுவாக சுற்றும் (நகரும்) கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி ஆகியோர்கள் ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 4 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை எடுத்துக் கொள்வார்கள். ஆதலால் நடைமுறை வாழ்க்கையில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய நான்கு கிரகங்களில் ஏதெனும் ஒன்று; ஒரு ஜாதகத்தில் 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக வந்து கோச்சாரத்தில் 6 அல்லது 8 அல்லது 12-ம் பாவ உபநட்சத்திர அதிபதியின் (திருமண வாழ்க்கையை எதிர்க்கின்ற கிரகங்களின்) நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலகட்டங்களில் திருமணத்திற்கு உண்டான காரியங்களில் ஈடுபடும் போது ஓரு சில தடையை ஏற்படுத்தும். இந்த தடை என்பது தற்காலிகமாக தான் இருக்குமே தவிர கொடுப்பினை மற்றும் தசாபுத்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது.

உதாரணத்திற்கு, திருமணத்திற்கு வரன் பார்க்கின்ற வேளையில் எதிர்பாலினர் வீட்டில் சம்மதம் தெரிவித்தும் ஒரு சில காரணங்களுக்காக வரும் வரன்களை வேண்டாம் என்று தட்டி கழிப்பது, திருமண தேதியை உறுதி செய்த பின்பு சில காரணங்களுக்காக மீண்டும் தள்ளி போவது, திருமணம் சம்பந்தமான பேச்சுக்கள் எல்லாம் முடிந்த பின்னரும் சில காரணங்களுக்காக திருமண தேதியை உறுதி செய்யாமல் காலம் தாமதம் ஏற்படுவது போன்றவை உண்டாகும்.

இது போன்று சிறிய தடைகள் தான் கோச்சாரத்தால் ஏற்படுமே தவிர கொடுப்பினையும், தசாபுத்தியும் நன்றாக இருக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்பினை உண்டாக்காது.

ஒரு ஜாதகத்தின் பலனை 70% கொடுப்பினையும், 25% தசாபுத்தியும், 5% கோச்சாரமும் நிர்ணயிக்கின்றது எனக் கூறி இத்துடன் இக்கட்டுரையை நிறைவு  செய்கிறேன்.

Wednesday 27 April 2016

பிறந்த நேரத்தை சரிபார்ப்பது அவசியமா??


ஒரு குழந்தையின் ஜாதகத்தை கணிக்க ஜோதிடர்களுக்கு தேவைபடுவது; அந்த குழந்தையின்....
பிறந்த நேரம்,
பிறந்த தேதி,
பிறந்த இடம்
 ஆகிய இம்மூன்றும் தான்..

முதலில் ஒரு குழந்தை பிறந்த இடத்தின் முக்கியத்துவத்தை பற்றி பார்ப்போம்.... சூரிய உதயம் என்பது இடத்திற்கு இடம் வேறுபடும். அதாவது பூமியின் அட்சரேகை மற்றும்  தீர்க்கரேகையை (Latitudes and Longitudes) பொருத்து இந்த சூரிய உதய நேரம் மாறுபடும். ஒரு ஜாதகத்திற்கு பிரதான பாவமாக திகழும் லக்ன பாவம் என்பது இந்த சூரிய உதயத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதனால் தான் ஜாதகம் கணிதம் செய்யப்படும் பொழுது ஒரு குழந்தை பிறந்த இடமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இன்று பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனையில் தான் பிறக்கின்றன. அதற்காக ஜோதிடரிடம் மருத்துவமனையின் விலாசத்தை குறிப்பிட தேவையில்லை. அந்த மருத்துவமனை எந்த ஊரில் அமைந்துள்ளதோ அந்த ஊரின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது. அந்த குறிப்பிட்ட ஊரின் அட்சரேகை தீர்க்கரேகையை கொண்டு சூரிய உதய நேரத்தை கண்டுபிடித்து விடலாம்.

ஒரு வேளை மருத்துவமனை அமைந்திருப்பது சிறிய கிராமமாகவோ/ஊராகவோ இருப்பின் அதற்கு அருகாமையில் உள்ள நகரத்தின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது. காரணம் பெரும்பாலும் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரம் வரை சூரிய உதயம் நேரம் என்பது மாறாது. ஆதலால் ஜாதகம் கணிப்பதற்கு தேவையான இந்த பிறந்த இடத்தில் பிழை வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.

அடுத்ததாக ஒரு குழந்தை பிறந்த தேதி.... இந்த பிறந்த தேதி என்பது மருத்துவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியவேண்டியது என்பதில்லை. குழந்தை பிறந்த தினத்தன்று காலண்டரை பார்த்தாலே தெரிந்துவிட போகிறது. ஒரு வேளை குழந்தை நள்ளிரவு சமயங்களில் பிறப்பதாக இருப்பின் மருத்துவர்கள் குறிப்பிடும் நேரத்தைப் பொருத்து பிறந்த தேதியை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இது நாம் அனைவரும் அறிந்ததே.. ஆனால் இது போன்று நிகழ்வதற்கான வாய்ப்பு (probability) குறைவு என்பதால் இந்த பிறந்த தேதியிலும் பெரும்பாலும் பிழை வருவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

அடுத்ததாக அந்த குழந்தையின் பிறந்த நேரம்.... இதுல தான் வில்லங்கமே வருகிறது. (Ideal place where error can happen)  இங்கே தான் ஜோதிடர்களுக்கு சவால் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் பிறந்த நேரத்தில் பிழை வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன.

காரணம்.. முதலில் எந்த நேரத்தை பிறந்த நேரமாக எடுத்துக் கொள்வது என்பதிலேயே சில ஜோதிடர்களிடமும் பொதுமக்களிடமும் கருத்தொற்றுமை என்பது இல்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். அதாவது ஒரு குழந்தையின் பிறந்த நேரம் என்பது ஒரு சிலர் தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் நேரம் என்றும்; இன்னும் சிலர் குழந்தை முதன்முதலில் அழுகின்ற நேரம் என்றும் மற்றவர்கள் தொப்புள் கொடியை வெட்டிய நேரம் தான் என்றும் கூறுகிறார்கள்....

ஒரு குழந்தையின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட நேரத்தை தான் அந்த குழந்தையின் பிறந்த நேரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது மேலான கருத்தாகும்.

அதாவது ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் வளர்கின்ற பொழுது; அதன் தொப்புள்கொடி வழியாக தான் சுவாசத்தையும் உணவையும் தாயிடமிருந்து பெறுகிறது. என்ன தான் குழந்தை தன் தாயின் கருவறையிலிருந்து வெளியேறினாலும் தொப்புள் கொடி துண்டிக்கப்படும் வரை தன் தாயின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

பிறகு தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட உடன் முதன் முதலாக அந்த குழந்தை தனது சுயமுயற்சியினால் இப்பிரபஞ்சத்தில் உள்ள காற்றை சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அந்த வினாடியே நவகிரகங்களும் சேர்ந்து தன் கதீர்வீச்சுக்களின் (இருப்பிடத்தை பொருத்து வேறுபடும்) மூலமாக ஒரு காந்த புலத்தை (magnetic field) அந்த குழந்தையின் மேல் உருவாக்குகின்றது. இங்கே தான் எல்லாம் வல்ல இறைவன் நவகிரகங்களின் வாயிலாக அந்த குழந்தையின் விதியை நிர்ணயம் செய்கிறார்.

இன்னும் சுருக்கமாக சொல்லப் போனால்.. ஒரு குழந்தையின் தொப்புள் கொடியை துண்டிக்கப்பட்ட பிறகு தான், அந்த குழந்தையானது தனித்து ஓர் உயிராக இப்பிரபஞ்சத்தில் இயங்குகிறது.

ஆகவே ஒரு குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தாலும் அல்லது அறுவை சிகிச்சை (சிசேரியன் முறை) மூலமாக பிறந்தாலும் அந்த குழந்தையின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட நேரத்தையே பிறந்த நேரமாக கருதப்பட வேண்டும்.

அடுத்ததாக.... ஒரு குழந்தையின் பிறந்த நேரத்தை குறிக்கும் பொழுது பெரும்பாலானோர் வினாடியை கருத்தில் கொள்வதில்லை. அவசியம் வினாடியையும் சேர்த்து குறிக்க வேண்டும். இதை படித்தவுடன் இப்பொழுது உங்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். இதற்கான காரணத்தை இப்பொழுது கூறுகிறேன்..

அதாவது கிரகங்கள் வான்மண்டலத்தில் நிமடத்திற்கு ஒரு முறை நகர்வதில்லை..!! ஒவ்வொரு நொடியும் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.. எனவே ஒரு குழந்தை பிறந்த நேரத்திற்குண்டான வினாடியையும் குறித்தால் தான் கிரக நிலைகளை மிகத் துல்லியமாக பெற முடியும். அப்பொழுது தான் ஜாதக கணிதமும், பலனும் துல்லியமாக வரும்.

உயர் கணித சார ஜோதிட முறைப்படி நுட்பமாக ஆய்வு செய்யும் பொழுது வெறும் 30 வினாடி இடைவெளிக்குள் விதி கொடுப்பினை மாறுவதை தெளிவாக உணர முடியும். அதுவே குறைந்த தசா வருடங்களை கொண்ட சூரியன், செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் பாவ உபநட்சத்திர அதிபதியாக வரும் பொழுது 15 வினாடி இடைவெளிக்குள் விதி கொடுப்பினை (ஜாதகம்) மாறினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..

இது போன்று சில வினாடிகளிலேயே விதி அமைப்பு (ஜாதகம்) மாறிவிடுவதால் பிறந்த நேரத்திற்குண்டான வினாடியை குறிக்காமல் விடுவதும் ஜாதகத்தில் ஒரு பிழையாக வந்து விடுகிறது. 

அடுத்து, பொதுவாக நேரம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசப்படுகின்றது. ஏன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் நேரம் என்பது வேறுபடுகின்றது.. IST என்றால் Indian Standard Time என்று அர்த்தம். அதாவது நம் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் பொதுவான நேரம் தான் இது. ஆதலால் இந்தியாவில் பிறக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தை மையமாக கொண்டு தான் ஜாதகம் கணிதம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், இன்று நாம் அனைவரது வீட்டில் உள்ள சுவர்க்கடிகாரகங்களும், மருத்துவமனை மற்றும் அலுவலகங்களில் உள்ள சுவர்க்கடிகாரகங்களும், தனிநபர் பயன்படுத்தும் கைக்கடிகாரம் மற்றும் அலைபேசிகள் யாவும் ஒரு சேர அச்சு அசலாக வினாடி கூட மாறாமல் இந்த IST நேரத்தை தான் காட்டுகிறதா.. என்பது கேள்விக்குறியே..!! காரணம் நடைமுறையில் இவைகளுக்குள் சில நிமிடங்கள்/வினாடிகள் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.

இதை நான் இங்கே கூறிய நோக்கம் என்னவெனில்; ஒரு குழந்தையின் பிறந்த நேரம் என்பது மருத்துவர்களின் வாயிலாக தான் நாம் அனைவருக்கும் தெரிய வருகிறது. அப்படியிருக்கையில் மருத்துவமனையில் உள்ள சுவர்கடிகாரங்களோ அல்ல மருத்துவர்கள் அணியும் கைக்கடிகாரமோ சிறிது தவறான நேரத்தை (variation when compared to IST) காட்டுவதாக இருப்பின், அவர் கூறும் பிறந்த நேரத்தில் பிழை வரத்தான் செய்யும்.

இதற்கு நாம் மருத்துவர்களை குறை கூற முடியாது. காரணம் இரண்டு உயிர்களை (தாய், சேய்) பத்திரமாக மீட்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருக்குமே தவிர ஜாதக கணிதம் செய்வதற்காக இந்த நேரம் குறிப்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.. ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பிழை ஏற்பட சில சமயங்களில் இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது..

அடுத்ததாக, என் அனுபவத்தில் கண்டதில்.. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளின் பிறந்த நேரத்தை குறிக்காமல் விட்டிருக்கிறார்கள். துன்பம் வரும் வேளையிலும் திருமண காலங்களின் போதும் எம்மை தொடர்பு கொண்டு அவர்களது வாரிசுகளின் பிறந்த நேரத்தை சிறிதளவு ஞாபகபடுத்தி தோராயமாக (அதாவது அரைமணி நேரமோ அல்ல கால மணி நேர இடைவெளியை கொண்டு) குறிப்பிட்டு எதிர்கால பலன் பற்றி கேட்கிறார்கள்..

இது போன்று இன்னும் பல காரணங்களினால் பொதுவாக இந்த பிறந்த நேரத்தில் பிழையோ அல்லது குழப்பமோ வருவது சகஜம் தான். அதை சரி பார்த்து திருத்தம் செய்வது ஒரு பொருப்புள்ள ஜோதிடரின் முதற்கடமை ஆகும்.

ஒரு சில ஜோதிடர்கள்..
தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜாதகத்தை வாங்கிய பின்னர் அதில் குறிப்பிட்டிருக்கும் பிறந்த நேரம் சரிதானா!! என்று கூட சோதித்து பார்க்காமல் நேரிடையாக எதிர்கால பலன்களை சொல்லிவிடுகிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். ஜோதிடம் சில சமயங்களில் பொய்த்து போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

எனவே ஒரு ஜோதிடர், தங்கள் வாடிக்கையாளரிடம், அவரது எதிர்கால பலன்களை எடுத்துரைக்கும் முன்பு, அவர் பிறந்த நேரத்தை சரி தானா என முதலில் சோதித்து பார்ப்பது அவசியமானதாகும். ஒரு வேளை அவற்றில் ஏதேனும் தவறோ குழப்பமோ இருப்பின் அதை திருத்தம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் பலன்கள் துல்லியமாக வரும்..

இப்பொழுது உங்கள் மனதில் ஒன்று தோன்றலாம்.. அதாவது இது போன்று வினாடிக்கணக்கில் நேரத்தை குறிப்பது அவசியம்.. என இதுவரை எங்கும் கேள்விப்பட்டதில்லையே..!! அப்படியே இருந்தாலும் இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்று....!!!!

அதற்கான பதில்..
பிறந்த நேரத்தை வினாடியோடு குறிப்பது நடைமுறையில் சற்று கடினம் தான்..

ஆனால் அதே சமயம் வினாடிக்கணக்கில் துல்லியமாக பார்க்கப்படும் இந்த உயர் கணித சார ஜோதிட முறையில் ஆளும் கிரகங்களின் உதவியோடு பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கி ஒருவரின் உண்மையான பிறந்த நேரத்தை (actual birth time) வினாடிகணக்கில் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்....


[{(அடுத்த கட்டுரையில் இந்த பிறந்த நேரத்தை எப்படி துல்லியமாக சரி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்..)}]

நன்றி,
அருண் சுப்ரமணியன்,
www.astroarun.com 

Thursday 14 April 2016

ஜோதிடம் எதற்கு பார்க்க வேண்டும்??


சில தினங்களுக்கு முன்பு, எனது பாசமிகு  நண்பர் திரு. கோபிநாத் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர்; என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து; பின் அவருக்கான கொடுப்பினையை (பலனை) எடுத்துரைத்தேன். அப்பொழுது அவர் என்னிடம் ஜோதிடம் சம்பந்தமாக சில பொதுவான கேள்விகளை முன்வைத்தார்..

அவர் கேட்ட கேள்விகளையும், அதற்கு நான் அளித்த பதில்களையும் தொகுத்து "ஜோதிடம் எதற்கு பார்க்க வேண்டும்" என்ற தலைப்பில் ஓர் சிறிய கட்டுரையாக இப்பொழுது உங்களுக்கு வழங்குகிறேன்.

முதலில் அவர்,
விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முன்னரே, நம் முன்னோர்கள் கிரகங்களை கண்டுபிடித்த ஞானிகள். அந்த கிரகங்களின் இயக்கங்களை மையமாகக் கொண்டு ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்த ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரத்தில் எனக்கு பூரண  நம்பிக்கை இருக்கிறது; அதில் துளியளவும் மாற்றுக்கருத்து இல்லை.


மேலும், ஜோதிடத்தை கொண்டு ஒருவரின் விதியை ஓரளவு தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள்; அப்படியானால் விதியில் ஒரு சில விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லையெனில் அதை நாம் ஏதெனும் பரிகாரம் செய்வதன் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ மாற்ற இயலுமா?? என்று கேட்டார்..!!

அதற்கு நான்..
விதியை எவராலும் மாற்ற முடியாது!! என்று தடாலடியாக கூறினேன்.. அதாவது ஒரு குழந்தை இப்பிரபஞ்சத்தில் பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை பொருத்தே அந்த குழந்தையின் விதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதிப்படி தான் அந்த குழந்தையின் வாழ்க்கை முறை அமையும். சீராக இயங்கி கொண்டிருக்கும் கிரகங்களின் நிலைகளை மாற்றுவது என்பது சற்றும் இயலாத காரியம்!!


மேலும், ஒருவரின் விதி என்பது முழுக்க முழுக்க அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய/பாவ அடிப்படையிலே நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதனை அவருக்கு தெரிவித்தேன்.

[{(வாசகர்கள் கவனத்திற்கு: மேலும் விதியை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள நான் முன்னர் எழுதிய கொடுப்பினை என்கிற விதி என்றால் என்ன? என்ற கட்டுரையை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)}].

அடுத்து அவர்..
சரி.. விதி என்பது நிலையானது..!! . கே..!! விதியை மதியால் வெல்லலாம் என்று சிலர்  கூறுகிறார்களே.... அதற்கு என்ன அர்த்தம்?? என்று கேட்டார்..!!


அதற்கு நான்..
விதி என்கிற கொடுப்பினை என்பது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய யோக, அவயோகங்களைப் பற்றி, அதாவது தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல, தீய பலன்களைப் (ஜாதகருடைய வாழ்க்கை முறையை) பற்றி தெரிவிப்பது ஆகும்.


மதி என்றால் சந்திரன்/நிலவு
ஒரு ஜாதகர் பிறந்த பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருந்ததோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரமாக வரும். ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜென்ம நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) தசை தான் ஆரம்ப தசையாக வரும். இதனை தொடர்ந்து மற்ற கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தன் தசையை நடத்தும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த தசையை தான் "மதி" என்று சுருக்கமாக நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள்..

தசை என்பது நவக்கிரகங்களும் தனித்தன்மையுடன் ஒரு ஜாதகரை இயக்கும் காலம் என்று கூறலாம். அதாவது ஒவ்வொரு கிரகமும் தன் பங்கிற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜாதகரின் மேல் தனது முழு ஆதிக்கத்தினை செலுத்தும்மனிதனின் முழு ஆயுள் என்று சொல்லப்படும் 120 வருடங்களை ஒன்பது கிரகங்களும் தத்தம் காரகங்களை பொருத்து பிரித்து கொண்டு; அதற்கென வரும் கால கட்டங்களின் போது (தசாபுத்தியின் போது) ஜாதகரை முழுமையாக ஆளுமை செய்யும்.

உதாரணத்திற்கு.. ஒரு கிரகம் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சங்களை என்னதான் விதியில் கொண்டிருந்தாலும் அந்த கிரகத்தின் தசையோ/புத்தியோ/அந்தரமோ (மதி வழியாக) தன் வாழ்நாளில் நடைபெறும் பொழுது தான் அந்த கிரகத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியும்.
(
குறிப்பு: புத்தி என்பது தசையின் உட்பகுதி; அந்தரம் என்பது புத்தியின் உட்பகுதி).


சுருக்கமாக சொல்லப் போனால்.. ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றி தெரிவிப்பது விதி என்கிற கொடுப்பினை என்றால்; அந்த நல்ல தீய பலன்கள் அனைத்தும் எந்த எந்த காலங்களில் நடக்கும் என்று காலம் நிர்ணயம் (schedule) செய்வது மதி என்கிற தசாபுத்தியே.

[{(வாசகர்கள் கவனத்திற்கு: மேலும் தசாபுத்தியை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள.. நான் முன்னர் எழுதிய தசாபுத்தி  என்றால் என்ன? என்ற கட்டுரையை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)}].

பிறகு, அவருக்கு விதியை மதியால் வெல்ல முடியுமா.. என்பதை பற்றி விரிவாக ஓர் உதாரணத்துடன் விளக்கினேன்.....

ஒரு ஐாதகத்தில் 7-ம் பாவம் என்பது ஜாதகரின் வாழ்க்கை துணை மற்றும் திருமண வாழ்க்கையை பற்றி குறிக்கும். அதே போல கிரகத்தில் ஆண் ஜாதகர்களுக்கு சுக்கிரன்  களத்திர காரகராகவும்; பெண் ஜாதககர்களுக்கு செவ்வாய் களத்திர காரகராகவும் வருவார்கள்.. களத்திர காரகன் என்றால் வாழ்க்கை துணை மற்றும் திருமண வாழ்க்கையை பற்றி தெரிவிக்கும் கிரகம் ஆகும்.

பொதுவாக ஒரு ஆண் ஜாதகருக்கு பாவத்தில் 7-ம் பாவமும், கிரகத்தில் சுக்கிரனும் 6,8,12 போன்ற கொடிய பாவங்களை தொடர்பு கொண்டு கெட்டிருந்தால்; திருமண வாழ்க்கை அமைவதே கேள்விக்குறி தான் என்பதை விதியின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இது போன்ற சூழலில் இந்த 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக வரும் கிரகத்தின் தசையோ அல்லது சுக்கிரனின் தசையோ நடப்பில் இருந்தால் (மதி வழியாகவும் தொடர்பானால்) நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும். இங்கே தசாநாதன் என்கிற மதியும் கெட்டுப்போன மாதிரி ஆகிவிடும்..!! இதை தான் விதி வழி மதி செல்கிறது என்று கூறுவார்கள்.

ஆனால் மாறாக இந்த 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் மற்றும் சுக்கிரனை தவிர மற்று ஏழு கிரகங்களில் ஏதெனும் ஒரு கிரகம் திருமணத்திற்கு சாதகமான 1,3,5,7,9,11 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடத்தும் பொழுது என்னதான் திருமணத்திற்கான விதி (7-ம் பாவம் & சுக்கிரன்) பாதகமாக இருந்தாலும் கூட, மதி என்ற நடப்பு தசாநாதனாக வரும் கிரகம் திருமண வாழக்கைக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால்; விதியில் உள்ள அந்த தீய பலன்களை தற்காலிகமாக (அதனின் தசாகாலத்தில் மட்டும்) தடுத்து நிறுத்தி  மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை (விதியை எதிர்த்து மதி வழியாக) தர வல்லது. இதை தான் விதியை மதியால் (தசாபுத்தியால்) வெல்லலாம் என்று கூறுவார்கள்.

உடனே அவர்,
சரி விதி, மதி எல்லாம்
.கே......
ஒருவர் பிறந்த நேரத்தைப் பொருத்து இந்த விதியும் மதியும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல தீய பலன்கள் அனைத்தும் பிறந்த நேரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு அதை மாற்ற இயலாத போது.. பரிகாரம் எதற்கு.., நீங்கள் ஏன் ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறீர்கள்? அதனால் என்ன ஆகப் போகிறது..!! மற்றும் தெய்வ வழிபாடு தேவையா?? என்று கேட்டார்...........!!!!!

மேலும் சில தீமையான விஷயங்கள் இந்த இந்த கால கட்டங்களில் நடக்கும் என்று முன்னரே தெரியும்பொழுது; அது முற்றிலுமாக தவிர்க்க படலாமே.. என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டார்..

அவர் ஜோதிடத்தில் உள்ள அறியாமையால் தான் இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த நான், பிறகு ஒவ்வொன்றையும் பொறுமையாக அவருக்கு விளக்கினேன்..

வாழ்க்கை என்பது எவருக்கும் நிலையானது அல்ல.. ஏற்ற இறக்கம், இன்ப துன்பம் கலந்த கலவை தான் வாழ்க்கை. இதற்கு நம் பூமியின் துணைக்கோளான சந்திரனையே சாட்சியாக முன் வைக்கின்றேன். ஜோதிடத்தில் கிரக அந்தஸ்தை பெற்ற இந்த சந்திரன் என்பவர் 15 நாட்கள் வளரவும் (வளர்பிறை) பின் 15 நாட்கள் தேய்ந்தும் (தேய்பிறை) போகிறார்.

இதை நான் இங்கே கூறிய நோக்கம் என்னவெனில்; நல்ல தீய பலன்கள் அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. நல்ல பலன்கள் நடக்கும் பொழுது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தீய பலன்கள் நடக்கும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். மேலும், இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா என ஜோதிடர்களை நாடிச் சென்று அதனை மாற்ற முற்படுகின்றனர். இது மக்களின் இயல்பு தான். நான் அவர்களை ஒரு போதும் குறை கூற மாட்டேன்.

எல்லாம் வல்ல அந்த இறைவன் எவர் ஒருவருக்கும் தீமையான பலன்களை அவ்வளவு எளிதாக கொடுப்பதில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் கர்ம வினைகளை பொருத்தே அமைகிறது. அதை கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்.

அடுத்து பரிகாரம் எதற்கு, நீங்கள் ஏன் ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறீர்கள்? அதனால் என்ன ஆகப் போகிறது..!! என கேட்டீர்களே!! அதற்கு இதோ சில உதாரணங்களுடன் பதில்...........

ஒரு ஜோதிடரிடம் வாடிக்கையாளர் ஒருவர் இப்போது நான் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். வேலையை விட்டுவிட்டு  ஏதாவது சொந்த தொழில் செய்யலாமா?? என்று கேட்பதாக வைத்துக்கொள்ளவும்..!!

ஜோதிடத்தில் 6-ம் பாவம் என்பது ஜாதகர் செய்யும் உத்தியோகத்தை குறிக்கும். 7-ம் பாவம் என்பது சொந்த தொழிலிலை குறிக்கும். இவ்விரு பாவங்களில் எது புறம் சார்ந்த 2,4,6,10 போன்ற இரட்டைப்படை (பொருளாதாரத்திற்கு சாதகமான) பாவங்களை வலுவாக தொடர்பு கொள்கின்றதோ அதை செய்வது தான் நல்லது..

அதாவது ஒருவருக்கு 6-ம் பாவத்தை விட 7-ம் பாவம் அதிவலுவுடன் காணப்பட்டால் சொந்த தொழில் செய்ய கொடுப்பினை உள்ளது என பச்சை கொடி காட்டி விடலாம். ஆனால் மாறாக 6-ம் பாவம் வலுத்திருந்தால் உத்தியோகம் செய்வது தான் சிறந்தது; அதன் மூலமாக தான் நல்ல வருமானத்தை பெற முடியும் என்று கூறி உத்தியோகத்தை தொடர சொல்லலாம். இது தான் ஜோதிடர்களின் வாயிலாக ஒருவர் பெறும்/செய்யும் பரிகாரங்கள்....

அடுத்து கல்வி..
இது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.. இன்றைய சூழலில் திறமை ஒரு காரணமாக இருந்தாலும் கூட ஒருவர் தான் கற்ற கல்வியை பொருத்து தான் உத்தியோகம் பெற முடிகிறது.


கல்வியில் இன்று எத்தனையோ துறைகள் பெருகிவிட்டன.. இப்பொழுது 10-ம் வகுப்போ 12-ம் வகுப்போ படித்து முடித்த பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பது மேற்கொண்டு தன் மகனை/மகளை என்ன படிக்க வைக்கலாம்!! என்பதே ஆகும். ஜோதிட ரீதியில் இதற்கு தீர்வு காண முடியுமா என்று கேட்டால்; நான் நிச்சயம் முடியும் என்றே கூறுவேன்.

உதாரணத்திற்கு,
ஜோதிடத்தில் சனி பகவான் இரும்பு, இயந்திரம், இயந்திரவியல் (மெக்கானிக்கல்) போன்றவைகளுக்கு காரக கிரகமாக வரும். ஒருவரின் சுயஜாதகப்படி சனி பகவான் வலுவாக இருந்தால் இந்த இயந்திரவியல் துறையையே தாராளமாக படிக்க சொல்லலாம்.

அடுத்து.. புதன் தொலைத்தொடர்பு, மென்பொருள் (சாப்ட்வேர்) போன்றவைகளுக்கு காரக கிரகமாக வரும். புதன் பகவான் ஒருவரின் சுயஜாதகத்தில் வலுவாக இருந்தால் தொலைத்தொடர்பு மற்றும் மென்பொருள் (சாப்ட்வேர்) சார்ந்த துறைகளை படிக்க சொல்லலாம். இது போல ஒருவரின் சுயஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக உள்ளதோ அது சம்பந்தப்பட்ட துறையை படிக்க சொல்லலாம். இது தான் ஜோதிடர்களின் வாயிலாக ஒருவர் பெறும் பரிகாரங்கள்....

இது போன்று, ஒருவர் மனதில் எழும் சந்தேகங்களுக்கும், சில பிரச்சனைகளுக்கும் ஜோதிட ரீதியில் நிச்சயம் தீர்வு காண முடியும். ஆனால் விதியில் உள்ளதை எந்த ஒரு பரிகாரம் மூலமாகவும் மாற்ற முடியாது என்பதே எனது ஆணித்தரமான கருத்து.

உண்மையில் பரிகாரம் என்பதற்கு தமிழில் மாற்றுச் செயல் என்பது பொருள். மேலும் பரிகாரம் பற்றிய சில உண்மைகளை வெகு விரைவில் ஒரு கட்டுரையாக தொகுத்து எழுத உள்ளேன்..

அடுத்ததாக.. சில தீமையான விஷயங்கள் இந்த இந்த கால கட்டங்களில் நடக்கும் என்று முன்னரே தெரியும்பொழுது; அது முற்றிலுமாக தவிர்க்க படலாமே.. என்று கேட்டீர்கள்..!!

ஒரு ஜாதகருக்கு எதிர் வரும் காலங்களில் மோசமான சம்பவம் ஏதாவது ஒன்று நிகழ இருந்து; பின் அது ஜோதிடர்கள் மூலமாக தெரிய வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. ஜோதிடர்களிடம் ஆலோசனைகள் பெறுவதன் மூலமாக வரவிருக்கும் அச்சம்பவத்தை சமாளிக்க முடியுமே தவிர அதை முழுவதுமாக தடுக்க முடியாது. விதியை மாற்ற ஜோதிடர்கள் ஒன்னும் கடவுள் இல்லையே..!! ஒரு ஜோதிடரால் நடக்க இருக்கும் சம்பவத்தை ஜாதகருக்கு சுட்டிக்காட்டி சற்று கவனமாக இருக்க சொல்லலாம் அவ்வளவே!!

அடுத்து எந்த ஒரு சுபகாரியம் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு நல்ல நாள்/நேரம் பார்ப்பது அவசியம். இதன் சூட்சமத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் விளக்குகிறேன். ஒருவரின் சுயஜாதகத்தில் வலுவாக இருக்கின்ற கிரகங்களின் நட்சத்திரம் சம்பவிக்கும் காலங்களில் ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பயனுள்ளதாக அமையும். இது போன்று சாதகமான காலத்தை ஜோதிடத்தின் வாயிலாக அறிந்து கொண்டு செயல்படுவதனால் நல்ல வளர்ச்சி அடைய முடியும்.

[{( இப்பொழுது நீங்கள் உங்கள் மனதில் ஒன்று நினைக்க கூடும். அதாவது ஜோதிடர் சொன்ன ஆலோசனைப்படி நடந்தால் சில நேரம் விதியை மாற்றுவது போல் ஆகிவிடாதா என்று....! ஒரு ஜாதகர் ஒரு சிறந்த ஜோதிடரை அனுகி அவரிடம் ஆலோசனைகளை பெற்று அதன்படி நடந்து, நல்ல வழியில் தன் வாழ்க்கையை அமைத்து கொள்வது கூட விதியில் நிர்ணயிக்கப்படும் விஷயம் தான். இறைவனின் அருளால் உருவானது தானே இந்த ஜோதிடம்..!!

ஏன் இப்பொழுது நவக்கிரகங்களின் உதவியோடு நான் எழுதியுள்ள ஜோதிடம் சம்பந்தமான இந்த கட்டுரையை படிப்பது கூட முன்னரே விதியில் நிர்ணயிக்கப்பட்டது தான்.. )}]

விதியை (விதியில் உள்ள தீய பலன்களை) மாற்ற இயலாத போது தெய்வ வழிபாடு அவசியமா?? என்று முன்பு கேட்டீர்கள். நீங்கள் கேட்ட விதம் சரியானதாக இருந்தாலும் அது மிக மிக தவறான கேள்வி.

நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த சில  பாவங்களுக்காக தான் இப்பிறவியில் சில மோசமான பலன்களை அனுபவிக்கின்றோம். எவர் ஒருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாவத்தை செய்யும் பொழுது தெய்வத்தை நினைப்பதே இல்லை..!! அந்த கர்ம வினைகளின் பயனாக சில மோசமான பலன்களை அனுபவிக்கும் போது மட்டும் சிலர் தெய்வத்திடம் தன்னை காப்பாற்ற வேண்டுகின்றனர்.. இருப்பினும் தெய்வம் யாரையும் கைவிடுவதில்லை.

உண்மையில் தெய்வத்தை வணங்கி வந்தால் கர்ம வினைகளின் பயனாக சில மோசமான பலன்கள் நடக்க இருந்தாலும்; அதனின் வீரியம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினேன்.

இதை அனைத்தும் கேட்ட பிறகு அவர், எனது எதிர்கால பலன்கள் மட்டுமல்லாமல் ஜோதிடம் சம்பந்தான சில சூட்சமங்களையும் இப்பொழுது நன்றாக தெரிந்து கொண்டேன்.......... மிக்க நன்றி என்று கூறினார்.

உண்மையில் நான் தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் நெடுநாட்களாகவே இது சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று எண்ணி வந்தேன். ஆனால் அன்று அவர் கேட்ட கேள்விகள் தான் இந்த கட்டுரையை இவ்வளவு எளிதாக எழுத முடிந்தது என்று நினைக்கின்றேன். மேலும் இந்த கட்டுரையை அவருக்கு அர்பணிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறன்.

இறுதியாக..
ஒருவர் தன் வாழ்க்கையில், சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும், சோதனையான காலங்களிலிருந்து மீண்டு வருவதற்கும் எல்லாம் வல்ல அந்த இறைவன் இந்த புண்ணிய பூமியில் உள்ள சில தலைசிறந்த ஜோதிடர்களின் வாயிலாக நிச்சயம் ஒரு நல்ல வழியை காட்டுவார்; ஆனால் அதற்கும் ஜாதகத்தில் தெய்வத்தின் கொடுப்பினை இருக்க வேண்டும் எனக் கூறி இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்..